Crime, law and justice
மது போதை சண்டையால் போலீசுக்கு பயந்து வேகம்.. 8 மாணவர்கள் பலியான பின்னணி..! கார் விபத்து ஏன்? பரபரப்பு தகவல்
கேரளா திருச்சூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்துக்கு முன் நடந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை.

கல்லூரியில் இருந்து காரில் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி 8 மாணவர்கள் பலியான நிலையில், தங்கள் பிள்ளைகளின் உயிரற்ற உடல்களை பார்த்து பெற்றோரும்.. உற்றாரும்..கதறி அழுதனர்.
திண்டுக்கல்லில் உள்ள பி. எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் உள்ள விடுதி மாணவர்கள் 7 பேர் தங்கள் கல்லூரி நண்பரை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு காரில் சுற்றுலா சென்றனர்.
திருச்சூர் கைப்பமங்கலத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் பக்கம் மோதியதில், காரில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இந்த கோர விபத்துக்கு சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மற்றும் அதன் ஓட்டுனரும், மாணவர்களின் அதி வேகமும் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் மாணவர்களின் உடல் கூராய்வு அறிக்கையில் அவர்களில் சிலர் மது அருந்தி இருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மது போதையில் அதிவேகத்தில் சென்றதால் இந்த கோர விபத்து நடந்ததா ? என்ற கோணத்தில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணையை முன்னெடுத்த போது மாணவர்கள் விடுதி ஒன்றில் சண்டையிட்டு தப்பி வந்த தகவல் தெரியவந்தது.
குருவாயூரில் சாமி கும்பிட்டு முடித்த கையோடு, கொடுங்காலூர் நோக்கிப் புறப்பட்ட மாணவர்களில் ஒரு சிலர் வழியில் மது அருந்தி விட்டு, திருச்சூர் தளிக்குளம் பத்தாம் கல் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இரவில் அறை எடுத்து தங்க முடிவு செய்துள்ளனர்.
விடுதி முன்பு தங்கள் காரை நிறுத்திய போது அங்கு இருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் உள்ளூர் காவல்துறையினரிடம் செல்போன் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாணவர்கள் 8 பேரும் அவசரம் அவசரமாக போலீஸ் வருவதற்குள் அங்கிருந்து தப்பிச்செல்லும் நோக்கில் காரை எடுத்துக் கொண்டு கொடுங்காலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிளம்பி உள்ளனர்.
போலீசார் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக மாணவர்கள் அதிவேகத்தில் காரை இயக்கி இருக்கலாம் என்று கூறிய போலீசார் என்.எச் 66 ல் சரியாக 16 வது கிலோமீட்டரில் அமைந்துள்ள கைப்பமங்களம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் பக்கத்தில் மோதிய கார் சின்ன பின்னமாகி 8 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்த கோர விபத்துக்கு சாலையோரம் சரக்கு லாரி நிறுத்தப்பட்டது தான் மூல முக்கியகாரணம் என்றும், கூடவே சில மாணவர்களின் மது போதையும், அதன் உந்துலால் ஏற்பட்ட சண்டையும், போலீசுக்கு பயந்து பதற்றத்துடன் காரை அதிவேகத்தில் ஓட்டியதும் காரணமாக அமைந்து விட்டதாக கூறும் போலீசார், மாணவர்களை காரில் விரட்டியதாக கூறப்பட்ட தகவலை மறுத்துள்ளனர்.