Lifestyle and human interest
கூடலூரில் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் முயற்சி..! கூண்டில் வந்து சிக்கிய சிறுத்தை..!

கூடலூர் பகுதியில் புலியைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் எதிர்பாராத விதமாக ஒரு சிறுத்தை சிக்கியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக புலி நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் இரண்டு மனிதர்களை வேட்டையாடிய ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும், பல்வேறு கூண்டுகள் வைத்தும் புலியைத் தேடும் பணி கும்கி யானைகளின் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
கடந்த 18 நாட்களுக்கும் மேலாக புலியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினரும், துப்பாக்கி ஏந்திய காவல் படையினரும் இரவு பகல் பாராது ஓவேலி எல்லைப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "வீர மதராஸி அடி கொல்லு!" இந்திய ராணுவத்தின் பெருமைமிக்க ‘மெட்ராஸ் ரெஜிமென்ட்’ சுவாரஸ்ய வரலாறு..!
ஓவேலி பாரம் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் புலியைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் ஒரு கூண்டில் ஆட்டை வைத்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இன்று எதிர்பாராத விதமாக அந்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது.
புலியைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியிருப்பதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.
