Politics
பருவமழையை எதிர்பார்த்து காத்திருப்பு விதைப்பு பணியை துவங்காத அவலம்: விதை நெல் விற்பனை மந்தம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார், கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பருவமழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு பணிக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்தாண்டு விதைப்பு பணியை துவங்கியிருந்த நிலையில் நடப்பாண்டில் தற்போது வரை துவங்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதுகுளத்துார், கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாததால் நெற்பயிரில் நஷ்டம் ஏற்பட்டது. வேறு வழியின்றி கூடுதல் பணம் செலவு செய்து நெல் அறுவடை செய்தனர். இருந்த போதிலும் கடைசியில் நஷ்டமே மிஞ்சியது. அதன் பிறகு விவசாயிகள் வேறு வழியின்றி நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக கூடுதல் பணம் செலவு செய்து கோடை உழவு செய்து நிலத்தை தயார் செய்து வைத்துள்ளனர்.
தற்போது வரை மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் விதைப்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:
முதுகுளத்துார், கமுதி, கடலாடி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 50 ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு போதிய மழை இல்லாதால் விவசாயம் முழுவதும் வீணாகியது. விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து காத்திருக்கின்றனர். தற்போது வரை மழை பெய்யாதால் நெல் விதைப்பு பணியை துவங்காமல் உள்ளனர்.
கடந்த ஆண்டு விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தற்போது வரை வரவு வைக்கப்படவில்லை. எனவே பயிர் இன்சூரன்ஸ் தொகை, காப்பீடு தொகை வரவு வைத்தால் விவசாயத்திற்கு தேவையான விதை நெல், இடுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக இருக்கும். தற்போது மழையை எதிர்பார்த்து ஏராளமான விவசாயிகள் விதைப்பு பணிக்காக காத்திருக்கின்றனர் என்றார். இந்தாண்டு நெல் விவசாயம் விவசாயிகளுக்கு கை கொடுக்குமா என்று எதிர்பார்த்துள்ளனர்.