Crime, law and justice
அதிர்ச்சி!வீட்டில் நடந்த பிரசவத்தில் தாய், குழந்தை பரிதாப பலி: சிகிச்சைக்கு வீட்டு உரிமையாளர் அனுப்பவில்லை என புகார்

காஞ்சிபுரம்: சுகாதாரத்தில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக பெருமை பேசி கொள்ளும் நிலையில், மருத்துவமனைக்கு செல்லாமல், சிறு கொட்டகையில் நடந்த பிரசவத்தின்போது, பழங்குடியின பெண்ணும், குழந்தையும் இறந்த கொடூரம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது. தங்களை சிகிச்சை பெற வீட்டு உரிமையாளர் அனுமதிக்கவில்லை என, இறந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளதால், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனரா என விசாரிக்க, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 46. இவரது மனைவி தேன்மொழி, 45. இவர்கள், வெள்ளைகேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் அமைத்து கொடுத்த தார்ப்பாய் கொட்டகையில் வசித்தவாறு, மரம் வெட்டு வேலை செய்து வந்துள்ளனர்.
குடிசையில் பிரசவம் தேன்மொழி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். உடன், மகள் காவியா, 19, மருமகன் முத்து, 22, என, இரு குடும்பங்களாக மரம் வெட்டும் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை 4:00 மணியளவில், தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. குடிசையிலேயே கணவர் முன் பிரசவம் நடந்துள்ளது.
குழந்தையின் உடல் பாதி வெளிவந்த நிலையில், அதிக ரத்தப்போக்கு காரணமாக, கணவர் கண் முன்னே தேன்மொழி துடிதுடித்து இறந்துள்ளார். குழந்தையும் அப்போதே இறந்துள்ளது.
அப்போது, வீட்டு உரிமையாளரான ஆறுமுகத்திற்கு, மொபைல் போன் மூலம் ஆனந்தன் அழைத்து, தேன்மொழி இறந்த விபரத்தை தெரிவித்துள்ளார். அவசர கால '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசில் புகார் சிகிச்சைக்காக வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பரிசோதித்துவிட்டு, தேன்மொழி இறந்ததை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 2,000 ரூபாய் கொடுத்த வீட்டு உரிமையாளர் ஆறுமுகம்; பெண் மற்றும் குழந்தையின் சடலத்தை எடுத்துக்கொண்டு, சொந்த ஊரான சிங்காடிவாக்கத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், தன் மனைவி மற்றும் குழந்தை இறப்புக்கு, உரிமையாளர் ஆறுமுகம் தான் காரணம் எனவும், மருத்துவ சிகிச்சை பெற அவர் அனுமதிக்கவில்லை என, பொன்னேரிக்கரை போலீசில், ஆனந்தன் புகார் அளித்துள்ளார்.
வீட்டு உரிமையாளரிடம், முன்பணமாக 20 ஆயிரம் பெற்றிருப்பதாகவும், சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல அனுமதி கேட்டாலும், எங்களை ஆறுமுகம் அனுமதிக்கவில்லை என, புகாரில் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சி புரம் கலெக்டர் சினேகாவிடம் கேட்டபோது, ''கொத்தடிமை தொழிலாளர்கள் பற்றி புகார் எழுந்துள்ளது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சப் - கலெக்டர் புவனேஷ்ராம் விசாரணை நடத்துவார்,'' என்றார்.
தகவல் இல்லை இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார சுகாதார அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:
பழங்குடியின பெண் இறந்தது பற்றி எங்களுக்கும் தகவல் வந்துள்ளது. ஆனால், அந்த பெண் குறித்து எங்கள் ஆவணங் களில் எந்த பதிவும் இல்லை. எங்களிடம் சிகிச்சைக்கு கூட வரவில்லை.
கிராம சுகாதார செவிலியர்கள் மூலம், நாங்கள் கர்ப்பிணியருக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கி வருகிறோம். பழங்குடியின பெண்களையும் நாங்கள் தொடர் கண்காணிப்பு செய்கிறோம். இறந்த தேன்மொழி பற்றி எந்த தகவலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.