Religion
எங்கெங்கு நோக்கினும் கண்ணனே! ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
திருப்பூர், செப்.5– ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகளுடன் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
* திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவிலில், நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா களைகட்டியிருந்தது. காலை, குருவாயூரப்ப சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. காலை மற்றும் மாலை நேரங்களில், பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழைத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில், புல்லாங்குழல்களுடன் ஸ்ரீகிருஷ்ணரும், ராதையரும் நடமாடுவது போல் கோலாகலமாக இருந்தது. பக்தர்கள், குருவாயூரப்ப சுவாமிக்கு துளசிமாலை மற்றும் செந்தாமரை மலர்களை சமர்ப்பித்து வழிபட்டனர்.
* திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீபாஞ்சராத்ர கோவில் கண்ணனுக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காலை, 7:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம், திருஆராதனம், சாற்றுமறை பூஜைகள் நடந்தன. மாலையில், பாலகிருஷ்ணன் ஊஞ்சல் வைபவமும், சங்குபால் வார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று மாலை, 6:00 மணிக்கு உறியடி, வழுக்குமரம் ஏறுதல் போன்ற திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ‘எங்கெங்கு நோக்கினும் கண்ணனே’ என்ற நிகழ்ச்சியும், குழந்தைகளுக்கான போட்டிகளும் நடக்க உள்ளன.
* திருப்பூர், ராயபுரம் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா பூஜைகள் நடந்தன. கோவில் வழியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், கோலாஷ்டமியை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீவரதராஜ சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
* திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரிலுள்ள ஸ்ரீசிருங்கேரி சங்கர மடம், ஸ்ரீசாரதாம்பாள் கோவிலில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி உற்சவம், கடந்த 3ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி முதல், 8:30 மணி வரையும், நேற்று காலை, 8:00 மணி முதல், 11:00 மணி வரையும், ஸ்ரீ உ.வே. பக்தவத்சலம் சுவாமிகளின் ஸ்ரீமன் நாராயணீயம் பாராயணம் நடந்தது.
* திருமுருகன்பூண்டியிலுள்ள ஸ்ரீவிவேகானந்த சேவாலயத்தில், அதிகாலை, 5:00 மணிக்கு மங்கள ஆரத்தி, சுப்ரபாதம், மங்களாசாசனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து முதல் விசேஷ பூஜை மற்றும் ஸ்ரீமன் நாராயணீயம் பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து நாம ஜெபம், தியானம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் அர்ச்சனை, ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து முழு பகவத் கீதை பாராயணம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த, திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ஸ்ரீகுருவாயூரப்பன்; ஸ்ரீதேவி பூதேவியுடன் ராயபுரம், வேணுகோபாலசுவாமி; சேவூர், ஸ்ரீபாலசாஸ்தா கோவிலில், ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீகுருவாயூரப்பன்; திருமுருகன்பூண்டி, ஸ்ரீவிவேகானந்தா சேவாலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகிருஷ்ணர்.