Economy, business and finance
அரசு பத்திரங்களின் மதிப்பு உயர்வு

ரிசர்வ் வங்கியின் சிறப்பு திட்டங்கள் வாயிலாக, எதிர்பார்த்ததை விட அதிக அமெரிக்க டாலர் கிடைத்திருப்பதால், இந்திய அரசு கடன் பத்திரங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்புக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், அன்னிய செலாவணியை ஈர்க்க ரிசர்வ் வங்கி சில சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அத்திட்டங்கள் வாயிலாக 136.38 பில்லியன் டாலர் கிடைத்திருப்பது, பத்திர சந்தைக்கு சாதகமாகிஉள்ளது.
குறிப்பாக, இந்திய வங்கிகள் மட்டும் 127.23 பில்லியன் டாலர் (ரூ.12.03 லட்சம் கோடி) டிபாசிட்டுகளை பெற்றுள்ளன. இதுதவிர வர்த்தக கடன்கள் மற்றும் வெளிநாட்டு கடன்கள் வாயிலாகவும் டாலர் குவிந்துள்ளது.
இதனால், வங்கி அமைப்பில் ரூபாய் புழக்கம் அதிகரிக்கும். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களிடம் உள்ள கூடுதல் நிதியை குறுகிய கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதால், பத்திரங்களுக்கான டிமாண்டு உயர்ந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேற்று வர்த்தகத்தில் 10 ஆண்டு அரசு கடன் பத்திரங்களின் வருமானம் 6.94 சதவீதம் வரை இறங்கியது.
மேலும், 5 ஆண்டு கடன் பத்திரங்களின் வருமானமும் 6.49 சதவீதம் வரை இறங்கியது. பத்திரங்களின் மதிப்பு உயர்ந்ததாலேயே அவற்றின் வருமானம் குறைந்துள்ளது. குறிப்பாக குறுகிய கால பத்திரங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.
ஒருவேளை கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், பத்திரங்கள் மீது அழுத்தம் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.