Economy, business and finance
வட்டி வருவாய் உயரும் என்ற எதிர்பார்ப்பால் கணிசமாக உயர்ந்த வங்கி பங்குகள்

சிறப்பு அன்னிய செலாவணி 'ஸ்வாப்' திட்டத்தின் வாயிலாக, 136.38 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததையடுத்து, வங்கி பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன.
அன்னிய செலாவணி வரத்தை அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் இந்த ஸ்வாப் திட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சிறப்பு வெளிநாட்டு நாணய வைப்புநிதி திட்டத்தின் வாயிலாக, கடந்த ஆகஸ்ட் 31 வரை சாதனை அளவாக 127.23 பில்லியன் டாலர் திரட்டப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணய கடன் களையும் சேர்த்தால் மொத்த வரத்து 136.38 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 12.89 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
அபரிமிதமான வரவேற்பு கிடைத்ததால், செப்டம்பர் 30 வரை செயல்படவிருந்த இத்திட்டத்தை ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 31 அன்றே முன்கூட்டியே முடித்துக் கொண்டது.
இதில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 17.88 பில்லியன் டாலர்களையும், ஆர்.பி.எல்., வங்கி 3.40 பில்லியன் டாலர்களையும் திரட்டியுள்ளன.
இந்த அறிவிப்பால் பெரும்பாலான வங்கிகளின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன. நேற்றைய வர்த்தக நேரத்தின் இடையே ஆர்.பி.எல்., வங்கியின் பங்கு 5.10 சதவீதம் வரையும், ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் 1.37 சதவீதம் வரையும் உயர்ந்தன.
ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் எஸ்.பி.ஐ., ஆகிய முன்னணி வங்கிகளின் பங்குகளும் 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.