Arts, culture, entertainment and media
“மண்டாடி” படத்தின் வெற்றி மீனவர்களுக்கானது - நடிகர் சூரி

‘மண்டாடி’ திரைப்படத்தில் மீனவனாக நடித்ததை நான் பாக்கியமாகக் கருதுவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன.
மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திலிருந்து ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ என்ற அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் நடிகர் சூரியின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
‘மண்டாடி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ராமநாதபுரத்தின் பாரம்பரிய கடல் விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ‘மண்டாடி’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் குறித்து நடிகர் சூரி பேசுகையில், “ ‘மண்டாடி’ படத்துக்காக வேலை செய்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஒட்டுமொத்தத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், இந்த ‘மண்டாடி’ டீம் எல்லாருக்கும் மிகப்பெரிய வெற்றி. கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இப்போது கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. இந்தப் படம் வெற்றி பெறும்னு மன உறுதியோடத்தான் பல மாதங்களாகக் கடலில் கிடந்தோம், கஷ்டப்பட்டோம். அது எல்லாத்துக்குமே இன்னைக்குப் பலன் கிடைச்சிருக்கு. இந்த ‘மண்டாடி’ படத்துக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பைப் பார்த்தோம். படத்தை பற்றி நல்லாவே பேசுறாங்க. தியேட்டர்ல படத்தை அவ்வளவு கொண்டாடுறாங்க. இந்தப் படத்தோட ஒட்டுமொத்த வெற்றியையும் கடலோர மீனவர்கள், அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என எல்லாருக்கும் ‘மண்டாடி’ படத்தை சமர்ப்பிக்கிறோம். ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.