காலை உணவில் சாணி பவுடர் கலப்பு தனிப்பட்ட விரோதம்; ஈரோடு மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ஈரோடு ராமபயனூர் அரசுப் பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலப்பு தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவில் சாணி பவுடரை கலந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் உணவில் கசப்பு தன்மை அதிகமாக இருந்ததால், மாணவர்களுக்கு அதனை பரிமாறாமல், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், உணவில் சாணி பவுடர் கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி தரப்பில் இருந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை பெற்ற காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன் மனைவி ஆலம்மாள் அந்தப் பள்ளியில் சமையலராக பணி புரிந்ததாகவும், அவரை அப்பணியில் இருந்து நீக்கியதால் பழிவாங்கும் நோக்கில், மாணவி ஒருவரை மிரட்டி, ஆசிரியர்கள் தரம் பார்க்கும் காலை உணவில் சாணிப் பவுடரை கலந்ததாக அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, “ராமபயனூரில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவில் தனிப்பட்ட விரோதம் காரணமாக சாணி பவுடர் கலக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்பு உணவு மாதிரியை எடுத்து வைக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
