Politics
ஆ.ராசா மீது போலீசார் வழக்குப்பதிவு

திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள தற்போது திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா எம்பி மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தவெக அரசின் சட்டத்துறை அமைச்சரின் பிறப்பு குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. முன்னதாக, தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய், சட்டமன்றத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் விதமாகப் பேசியதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் சென்னை முழுவதும் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி ஆ.ராசா மேடையில் பேசும்போது, தவெக அரசின் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மல்குமார் அவர்களின் பிறப்பு குறித்தும், அவரது தாய்மையையே இழிவுபடுத்தும் வகையிலும் மிகவும் அநாகரிகமான முறையில் அவதூறு கருத்துக்களைப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தவெக தரப்பினர் மட்டுமன்றி, திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கனிமொழி அவர்களே 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்ற திருக்குறளை பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆ.ராசாவும் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வழக்கறிஞர், ஆ.ராசாவின் இந்தப் பேச்சு மிகவும் மோசமாக பேசும் வகையில் உள்ளதாகவும், இதைக் கேட்டுத் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறிச் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை கையில் எடுத்த போலீசார், ஆ.ராசா எம்பி மீது ஆபாசமாகப் பேசுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மொத்தம் 7 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)