Health
திருவேங்கிடபுரம் சாலையில் மழைநீர் தேக்கம்: கொசு உற்பத்தியால் டெங்கு பரவும் அபாயம்
பொன்னேரி:திருவேங்கிடபுரத்தில், சாலையில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால், அப்பகுதியில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் பாலமுருகன் நகர், கருமாரியம்மன் கோவில் தெருவில், சிறுமழை பெய்தாலும், மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது.
மழைநீர் வடிவதற்கு, 10 - 15 நாட்களாகும் நிலையில், அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த சிறுமழையில் தேங்கிய மழைநீர், இதுவரை வடியாமல் உள்ளது.
அதில், குப்பை கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன், சாலையை குடியிருப்பு மக்கள் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.
இதனால், இந்த சாலை வழியாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர், குடியிருப்பு மக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி, அருகில் உள்ள தெருக்கள் வழியாக சுற்றிக்கொண்டு பயணிக்கின்றனர்.
தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால், டெங்கு பரவும் அபாயமும் உள்ளது. எனவே, மேற்கண்ட சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.