Politics
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம்: திருத்தணி விவசாயிகள் அதிருப்தி
திருத்தணி:திருத்தணி கோட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதில் அதிகாரிகள் காலதாமதம் செய்வதால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில், விவசாயிகள் நலன்கருதி, 16 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையில், சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகள், தற்போது நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அரசு அறிவித்தும், திருத்தணி வருவாய் கோட்டத்தில், நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்காமல், அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர்.
இதனால், அறுவடை செய்த நெல் மூட்டைகளை, வயல்வெளியிலும் வீடுகளுக்கு முன்பும் திறந்தவெளியில் வைத்திருப்பதால், மழையில் நனைந்து வீணாகின்றன என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருத்தணி ஒன்றிய தலைவர் இ.லிங்கமூர்த்தி கூறியதாவது:
திருத்தணி கோட்டத்தில், திருத்தணி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம், வேலஞ்சேரி, கே.ஜி.கண்டிகை, அருங்குளம், பூனிமாங்காடு, களாம்பாக்கம், முத்துக்கொண்டாபுரம், பெரியகளக்காட்டூர், வீரராகவபுரம், கிருஷ்ணசமுத்திரம், நொச்சிலி, அம்மனேரி உட்பட, 16 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
கலெக்டர் கவிதா, நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, உடனடியாக கொள்முதல் பணிகளை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், திருத்தணி கோட்டத்தில், இதுவரை கொள்முதல் நிலையங்களை திறக்காமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் பலர், அறுவடை செய்து நெல்லை, வயல்வெளியிலேயே கொட்டி வைத்துள்ளனர்.
தற்போது, அவ்வப்போது மழை பெய்வதால், நெல் மழையில் நனைந்து வீணாகிறது. இதே நிலை தொடர்ந்தால், மழையில் நெல்மணிகள் வீணாகும் அபாயம் உள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதிம் உடனே கொள்முதல் நிலையங்களை திறக்க, வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.