Arts, culture, entertainment and media
வழங்கப்படுமா நீர் மேலாண்மை, மண் வள பாதுகாப்பு பயிற்சி... விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
திண்டுக்கல், செப்.10 பயிர் சாகுபடியில் லாபம் பெறவும், சுற்றுச்சூழல் சமநிலையை பேணும் வகையிலும்
பயிர் சாகுபடியில் லாபம் பெறவும், சுற்றுச்சூழல் சமநிலையை பேணும் வகையிலும் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை, மண் வள பாதுகாப்பு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மாவட்டத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் எக்டேரில் வேளாண் பயிர்களும், ஒரு லட்சத்து 70 ஆயிரம் எக்டேரில் தோட்டக்கலை, மலை பயிர்களும் சாகுபடியாகின்றன. இதில் 2.73 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பட்டுவளர்ச்சித்துறையில் 2553 ஏக்கரில் மல்பெரி செடிகளை 1146 விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் பருவநிலை நாள்தோறும் மாறுபட்டு வருகிறது. எனவே விவசாயிகளுக்கு வட்டார அளவில் நீர் மேலாண்மை, மண்வள பாதுகாப்பை மேம்படுத்தும் பயிற்சிகளை இலவசமாகவே வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரநிதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:சீதோஷ்ண நிலையை கணிக்க முடியவில்லை. கிடைக்கும் நேரத்தில் நீரை வீணாக்காமல் பயிர்களுக்கு சிக்கனமாக பாய்ச்சும் முறைகளை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைநீர் சேகரிப்பு, பயிர் மூடாக்கு அமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்து மழைநீரை சேகரிக்கும் பயிற்சிகளையும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.
மேலும் மண் வள பாதுகாப்பில் மண் பரிசோதனை, இயற்கை உரமிடல், பசுந்தாள் உரங்கள் பயன்பாடு, பயிர் சுழற்சி முறை சாகுபடி முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் உரங்களுக்கான செலவு குறையும். தரமான மகசூல், நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும். நீண்ட கால நிலத்தின் உற்பத்தித்திறன் நிலைத்திருக்கும் என்ற பயன்களை தெரிவித்து விவசாயிகளுக்கு வட்டார அளவில் பயிற்சிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றனர்.