Politics
நெல் கொள்முதல் நிலையத்திற்கு பூட்டு: குறிஞ்சிப்பாடியில் விவசாயிகள் தவிப்பு

குறிஞ்சிப்பாடி;குறிஞ்சிப்பாடியில் நேரடி நெல் கொள்மதல் நிலையம் பூட்டிக் கிடப்பதால், அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த வரதராஜன்பேட்டை ஊராட்சி, ரெட்டிபாளையத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அறுவடை முடிந்து கல்குணம், வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை, மேலப்புதுப்பேட்டை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல் குவியலை கடந்த, 12 நாட்களாக இங்கு கொட்டி வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் கொள்முதல் நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு கடந்த, 8ம் தேதி பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால் ரெட்டிபாளையம் நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை இப்பகுதியில் லேசான மழை பெய்ததால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். ஏறக்குறைய, 4 ஆயிரம் மூட்டைகளில் விவசாயிகளின் நெல் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் இந்த நிலையத்தை பார்வையிட்டு கொள்முதல் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது : எங்கள் கொள்முதல் நிலையம் மட்டும் திறக்கப்படாமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டால் எங்கள் அழைப்பை ஏற்பதே இல்லை. விவசாயிகளின் உழைப்பு வீணாவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.