Religion
மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அலங்காரமிட்டு அழகு பார்த்தனர்.
விருதுநகரில் மகாரண்யம் முரளீதர சுவாமிஜியின் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில்ராதா கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 10 நாட்கள் உற்ஸவம் நடந்தது.
கிருஷ்ணர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலையில் ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடந்தது.
மாலை 'கிருஷ்ண லீலாம்ருதம்' என்ற தலைப்பில் உபன்யாசம் நடந்தது. கன்னியா, சிவகன்னியா சகோதரிகள் இந்நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நிறைவாக ராதா கிருஷ்ணருக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் வெங்கடேஷ்குமார் செய்தார்.
விருதுநகர் பாண்டியன் நகர் முத்தால் நகர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடந்தது. மாலை உறியடி நிகழ்வு நடந்தது. சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலம் வந்தனர்.
*ராஜபாளையம் சர்வ சமுத்திர அக்ரஹாரம் சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் 81 கலச ஹோமம் அபிஷேகம் ஆராதனை சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது.
நேற்று காலை கிருஷ்ணருக்கு சங்கு பால் கொடுத்தல் மாலை ருக்மணி கல்யாணம் இரவு சுவாமி வீதி உலா நடந்தது.
இதேபோல் பெரியமந்தை கிருஷ்ணர் கோயில், முடங்கியார் ரோடு நாயுடு தெரு, சாஸ்திரி நகர் கிருஷ்ணன் கோயில், வ.உ.சி நகர், வாட்டர் டேங்க் பஜனை கோயில், சுரைக்காய் பட்டி தெரு, சேத்துார் மேட்டுப்பட்டி சந்தான பாலகிருஷ்ணன் கோயில், தளவாய்புரம் கிருஷ்ணன் கோயில், தேவதானம், சொக்கலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விசேஷ பூஜைகள் உறியடி, பால்குடம் திருவிளக்கு பூஜை, வீதி உலா உள்ளிட்ட வைபவங்கள் நடத்தி பக்தர்கள் கொண்டாடினர்.
*ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. உயர்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா, தாளாளர் குருவலிங்கம் தலைமையில் நடந்தது. பள்ளி அறங்காவலர்கள் பூங்கொடி, சித்ரா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
கோகுலாஷ்டமி குறித்து முதல்வர் சிவப்பிரியா பேசினார். மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து விழாவில் பங்கேற்றனர்.
* ஒயிட்பீல்டு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் ராஜ்குமார் தலைமையில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. மாறுவேடப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் முதல்வர் வனிதா, உதவி முதல்வர் தேவி பரிசுகள் வழங்கினர்.