Politics
“தவெக தோழமை கட்சிகள் ஆதரவு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” – சிபிஐ வீரபாண்டியன்

தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் சிபிஐ பங்கேற்காது என வீரபாண்டியன் அறிவிப்பு.
சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “தவெக நடத்தும் 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்” என அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, தனிப் பெரும்பான்மை பெறாததால், ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவை நாடியது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்கிரஸ் வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்தது.
இதனைத் தொடர்ந்து, விசிக, ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளும் தவெக கூட்டணியில் இணைந்து ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து தங்களது ஆதரவை வழங்கின. இதன் மூலம், தவெக ஆட்சி அமைத்து பெரும்பான்மை நிரூபித்தது.
இதனைத் தொடர்ந்து கூட்டணியை வலுவாக்க தவெக கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தை சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை புறக்கணித்த நிலையில், ஏனைய கட்சிகள் பங்கேற்றன.
இந்நிலையில், 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை வரும் 9ஆம் தேதி சென்னையில் கூட்டியுள்ளது. இதில் பங்கேற்க தனது அமைச்சரவையில் இருக்கும் கட்சிகளுக்கும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கும் தவெக அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என காலை சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிபிஐ மாநிலச் செயலாளர் தற்போது தவெக தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளார்.
சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “தவெகவுக்கான ஜனநாயக பூர்வ ஆதரவு தொடர்கிறது. மறைமுக பாஜக ஆட்சியை தொடராமல் இருக்க இந்த முடிவை எடுத்தோம். நாளைய ஆதரவு கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஐ பங்கேற்காது. இதனை முறைப்படி தெரிவிக்க இருக்கிறோம்.
இடைத் தேர்தல் ஆதரவு குறித்து ஆலோசனை செய்து முடிவெடுப்போம். முதல்வர் என்பது பெரிய பொறுப்பு. கூடுதல் பொறுப்பு உணர்ந்து முதல்வர் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சி கேள்விக்கு உரிய பதில் தர வேண்டிய கட்டாயம் உள்ளது. மிசா காலத்தில் திமுகவினர் பாதிக்கப்பட்டார்கள் அதனை கேலிக்குள்ளாக்கக் கூடாது” இவ்வாறு தெரிவித்தார்.
