Politics
தவெக கூட்டணி, ஆதரவு கட்சித் தலைவர்களுடன் அமைச்சர்கள் சந்திப்பு! பின்னணி என்ன?

தவெக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் சிபிஎம், சிபிஐ, மதிமுக தலைவர்களைச் சந்தித்தனர்.
தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் சூழலில், தவெக அமைச்சர்கள் இன்று இடதுசாரிகள் மற்றும் மதிமுக தலைவர்களைச் சந்தித்தனர்.
தவெக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் இன்று தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் தவெக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், “சிபிஎம் அலுவலகத்தில் தலைவர்களைச் சந்தித்து பேசினோம். இதில், தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்டோர் குறித்து இன்றைய சந்திப்பில் பேசினோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” எனத் தெரிவித்தார்.
அதேசமயம் இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் வீரப்பாண்டியன், “தவெக நிர்வாகிகளாக இன்று அவர்கள், எங்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் அரசியல்தான் பேசினோம். நாளை இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டப்பட இருக்கிறது. அதில், அரசியல் கருத்துகள் குறித்து விவாதிப்போம். தவெக கூட்டணி அரசில் இடம்பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதேபோல், அமைச்சர்களுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் செப்டம்பர் 9ஆம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிச்சயம் ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும்” எனத் தெரிவித்தார்.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
