Politics
மதுபான கொள்முதலில் பாரபட்சம் இல்லை; அமைச்சர் விக்னேஷ் உறுதி

கோவை: ''மதுபான கொள்முதலில் பாரபட்சம் இல்லை,'' என, மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி: மதுபான கொள்முதலில், தி.மு.க., - அ.தி.மு.க சார்ந்த ஆலைகள் என்ற எந்த பாகுபாடுமின்றி, 11 நிறுவனங்களிடம் இருந்தும் சமமாக கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த திராவிட ஆட்சிகளில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஊழல் நிறைந்த துறையாக இத்துறையை வைத்திருந்தனர்.
டாஸ்மாக் கடைகள் முழுமையாக சரியான நடைமுறைக்கு வந்தபின், எப்.எல்.2 கடைகளின் மீது கவனம் செலுத்தப்படும். 'பார்'களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் வழங்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, விரைவில் வெளியாக உள்ள பார் டெண்டர்களில் , உணவகம் நடத்தி கொள்ளும் யோசனையும் பரிசீலனையில் உள்ளது.
மது பாட்டிலுக்கு, கூடுதல் விலை வசூலிக்கும் பிரச்னைக்கு தீர்வுகாணும் வரை டாஸ்மாக் ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' நடவடிக்கை தொடரும். 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டிய காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் நான்கு ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் அமைப்பதற்கான டெண்டர் வரும் 5ம் தேதி திறக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.