Crime, law and justice
8 தமிழ் மாணவர்கள் உயிரிழந்த விபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்... குடும்பத்தின் ஒரே நம்பிக்கை..!

Accident | கேரளாவில் நடந்த கோர விபத்துக்கு முன்பு 8 மாணவர்களும் காரில் செல்ஃபி வீடியோ எடுத்தபடி உற்சாகமாக பயணித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
தமிழக மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமான கேரள விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் 3ஆம் ஆண்டு படித்து வந்த மாணவர்கள் சூர்யா, சந்தோஷ், விஷ்வா, ஜீவா, யுவசஞ்சித், பிரசன்னா, முரளி கிருஷ்ணன், ஜோசுவா ஹில்சன் ஆகியோர், கிருஷ்ண ஜெயந்தியைத் தொடர்ந்து வார விடுமுறை என்பதால், கேரளாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி, மதுரையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் புதிதாக வாங்கிய காரை இரவலாக பெற்றுக்கொண்டு கேரளாவுக்குச் சென்றநிலையில், திருச்சூர் மாவட்டம் பனம்பிக்குன்னு பகுதியில் சாலையில் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேரும் உயிரிழந்தனர். குடும்பத்தினரிடம் சொல்லாமல் சென்ற சிலரும் விபத்தில் உயிரிழந்தது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் நடந்த கோர விபத்துக்கு முன்பு 8 மாணவர்களும் காரில் செல்ஃபி வீடியோ எடுத்தபடி உற்சாகமாக பயணித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
கூலி வேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவரான திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா, கல்விக்கடன் பெற்று படித்து வந்தார். கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி 2 மாதத்தில் தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர இருந்த நிலையில், விபத்தில் பலியானது குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது.
குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்த திண்டுக்கல் மாணவன் சூர்யா விபத்தில் உயிரிழந்ததால் கூலி வேலை செய்து மகனை பொறியியல் படிக்க வைத்த பெற்றோர் நிர்கதியாய் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கு அரசு உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
