Politics
இடைத்தேர்தல் நடந்தாலும் மாவட்டம் முழுவதும் நடத்தை விதி? தேர்தல் கமிஷன் அறிவிப்பால் ஷாக்

திருப்பூர்:இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி மட்டுமல்ல, மாவட்டம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிஅமலில் இருக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு, தேர்தல் கமிஷன், இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் வேட்புமனுதாக்கல் துவங்குகிறது. வரும் அக்., 6ம் தேதி ஓட்டுப்பதிவும், 9ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.
இந்நிலையில், தேர்தல் நடக்கும் தொகுதிகளில், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நேற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து, தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அறிவுறுத்தினர். இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட மாவட்டம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும். அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடு விதிக்கப்படுமென, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே நேற்று அறிவித்துள்ளார்.
மாநில தலைநகர், பெரு நகரம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், அத்தொகுதியில் மட்டும் விதிமுறைகள் அமலில் இருக்கும். மற்ற பகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், மாவட்டம் முழுவதும் அமலில் இருக்கும் என்று விளக்கமும் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் கமிஷனின் புதிய அறிவிப்பால், அரசியல் கட்சியின் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வியாபாரம் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள்; மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்பதாலும், கட்சி பணிகள் பாதிக்கும் என்பதாலும், மாவட்டம் முழுவதும் கட்டுப்பாடு விதிப்பதை தளர்த்த வேண்டுமென, அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, 'தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்,' என, மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே உறுதி அளித்துள்ளார்.