சுற்றுலா தலங்களில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் நெரிசலில் தவிக்கும் பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் வனச் சுற்றுலாத் தலங்களில் முறையற்று நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதியடைகின்றனர்.
கொடைக்கானல் வனச் சுற்றுலாத் தலங்களான துாண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் ஆகியன வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ளன.
இந்த சுற்றுலாத் தலங்களுக்கு நுழைவு கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
இச்சூழலில் சுற்றுலாத் தலங்களை காண வருகை தரும் பயணிகள் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் அதனை பயன்படுத்தாமல் ரோட்டின் இருபுறமும் முறையற்று நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். துாண் பாறை, குணா குகை பகுதியில் ஏற்படும் இடியாப்ப சிக்கலால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. வனத்துறை ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்துவதில்லை. போக்குவரத்து போலீசாரும் நியமனம் இல்லாத சூழல் உள்ளது. இச்சூழலில் வாகன ஓட்டிகளிடையே சர்ச்சை ஏற்படுகிறது.
இப்பிரச்னை வனச் சுற்றுலாத் தலங்கள் முழுமையும் உள்ளது. பயணி களிடம் கட்டணம் வசூலிக்கும் வனத்துறை வாகன நெரிசலை கட்டுப்படுத்துதல், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் வனச் சுற்றுலாத் தலங்களில் நீடிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.