Religion
சென்னனுார் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயிலில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திவிழாவை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், நாமசங்கீர்த்தனம் முழங்க வழுக்குமரம் ஏறுதலும், உறியடி நிகழ்ச்சியும் நடந்தது.
இக்கோயிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத கஸ்துாரி ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோயில் முன்பு, 30 அடி உயர வழுக்குமரம் எண்ணெய் தடவி தயார் நிலையில் அமைக்கப்பட்டது.
வழுக்கு மரத்தின் உச்சியில் பரிசுத்தொகை, பலகாரங்கள், பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. சிறுவர்கள் ஆர்வத்துடன் வழுக்கு மரத்தில் ஏற முயற்சித்தனர்.
நீண்ட நேர முயற்சிக்குப்பின்பு ஒரு சிறுவன் உயரே சென்று அதிலிருந்த பலகாரம், பரிசு, ரொக்கத்தொகை யை எடுத்தார். அவருக்கு மாலை அணிவித்து சாமி தரிசனத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் உறியடி நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் உறியடித்து மகிழ்ந்தனர். குழந்தைகளுக்கு பால், வெண்ணெய், தயிர், நெய், பழங்கள், அதிரசம், சீடை, முறுக்கு வழங்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.