Crime, law and justice
கேரளாவில் 8 தமிழக மாணவர்கள் உயிரிழப்பு காரணம் என்ன? - பெற்றோருக்கு நேர்ந்த கூடுதல் சோகம்!

கேரளாவில் விபத்தில் சுக்குநூறாகி இருக்கும் இந்த காரில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் உயிர் பறிபோயிருக்கிறது.
கேரளாவில் நடந்த கோர விபத்தில் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தொடர் விடுமுறை காரணமாக கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் பகுதியில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி அவர்கள் சென்றதாக தெரிகிறது. இரவு நேரத்தில் கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில் அவர்கள் சென்றபோது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் அதிவேகமாக மோதியது.
இதில் கார் முழுவதும் சுக்குநூறான நிலையில், அதில் இருந்த 8 பேரும் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கைப்பமங்கலம் காவலர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் சேதமடைந்த காரை வெட்டி, உள்ளே இருந்தவர்களை சடலங்களாக மீட்டனர். உயிரிழந்தவர்கள் சேலத்தைச் சேர்ந்த விஸ்வா, திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவசஞ்சித், சூர்யா, ஜோஷ்வா, மதுரையைச் சேர்ந்த சந்தோஷ், பிரசன்னா மற்றும் முரளி கிருஷ்ணன், ஜீவா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாவின்போது மாணவர்கள் அதே காரில் உற்சாகமாக பதிவிட்டு ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டிருந்தது காண்போரை மனம் உடையச் செய்துள்ளது. விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாததும், லாரி நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் எவ்வித எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்படாததும் விபத்துக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
அதே நேரத்தில், மாணவர்கள் பயணித்த கார் அதிவேகத்தில் வந்ததும் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதில் கூடுதல் சோகம் என்னவென்றால், புது கார் எடுத்து சுற்றுலா சென்ற மாணவர்கள் இந்த விஷயத்தை தங்கள் வீட்டில் சொல்லவில்லை என்பதே. விபத்து ஏற்பட்டு கேரள காவல்துறை போன் செய்து விபத்து தகவலை கூறும்போதே மாணவர்களின் பெற்றோர்களுக்கு அவர்கள் சுற்றுலா சென்ற விஷயமே தெரியவந்ததாக மலையாள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கேரள காவல்துறையினர் விபத்து ஏற்பட்டதை மட்டுமே தெரிவிக்க, மருத்துவமனையில் நேரில் வந்து பார்க்கும் போது தான் மாணவர்கள் உயிரிழந்த தகவல் பெற்றோர்களுக்கு தெரியவந்திருக்கிறது.
