பின்னலாடை வாரியம் திறக்கும் புதிய வாய்ப்புகள்
திருப்பூர், செப். 7– தமிழகத்தின் தொழில் வரைபடத்தில் திருப்பூருக்கு ஏற்கனவே தனி இடம் உண்டு. அந்த
தமிழகத்தின் தொழில் வரைபடத்தில் திருப்பூருக்கு ஏற்கனவே தனி இடம் உண்டு. அந்த அடையாளத்துக்கு அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக அமையப்போகிறது, தமிழ்நாடு பின்னலாடை வாரியம். பல ஆண்டுகளாக தொழில்துறையினர் எதிர்பார்த்த தனி அமைப்பு உருவாகும் நிலையில், வாரியம் எந்த வடிவில் அமையும்; பின்னலாடை தொழிலுக்கு என்னென்ன புதிய வாய்ப்புகளை திறக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கென, மத்திய, மாநில அரசுகளின் நேரடி கவனத்தில் செயல்படும் தனி அமைப்பு வேண்டும் என்ற கோரிக்கை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. இந்நிலையில், தமிழக அரசு ‘தமிழ்நாடு பின்னலாடை வாரியம்’ அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு, 65 சதவீதம் என்பதால், வாரியத்தின் நேரடி பயன் திருப்பூருக்கு அதிகமாக இருக்கும் என தொழில்துறையினர் நம்புகின்றனர்.
அரசாணை மூலம் உருவாக்கப்படும் வாரியத்தில் தலைவர், அரசு அதிகாரிகள், தொழில்துறை மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர் சாரா உறுப்பினர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
தற்போது பல்வேறு துறை அலுவலகங்களிடம் தனித்தனியாக கோரிக்கை வைக்கும் நிலை உள்ளது. வாரியம் அமைந்தால், தொழில் சார்ந்த பிரச்னைகளை ஒருங்கிணைத்து அரசின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அரசுக்கும், தொழில்துறைக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ பாலமாகவும் வாரியம் செயல்பட வாய்ப்புள்ளது.
பஞ்சு, நுால் விலை மற்றும் தட்டுப்பாடு, ஏற்றுமதி சந்தை, புதிய வர்த்தக வாய்ப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
இந்திய பருத்திக்கழகத்தின் மண்டல அலுவலகத்தை திருப்பூரில் அமைத்தல், மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்தல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதிய தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி ஆகியவற்றிலும் வாரியம் கவனம் செலுத்த முடியும்.
சாய, சலவை தொழில் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், திருப்பூரின் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்துக்கு தேசிய அளவில் அங்கீகாரம் பெறவும் முயற்சிக்கலாம்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி, தொழிலாளர் திறன் மேம்பாடு, நலத்திட்டங்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான தங்குமிட வசதிகளையும் வாரியம் மூலம் ஒருங்கிணைக்க முடியும்.
என்னென்ன பலன்கள்...
பின்னலாடை தொழில் பிரச்னைகளுக்கு அரசுடன் நேரடி தொடர்பு; பஞ்சு, நுால் உள்ளிட்ட மூலப்பொருள் பிரச்னைகளுக்கு தீர்வு; ஏற்றுமதிக்கு புதிய சந்தை வாய்ப்புகள்; தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதிய தயாரிப்புகளுக்கு ஊக்கம்; ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்துக்கு அங்கீகாரம்; குறு, சிறு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்கு கூடுதல் கவனம்.
பின்னலாடை தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு அரசுடன் நேரடியாக பேசும் அதிகாரப்பூர்வ தளமாக வாரியம் அமைய வேண்டும் என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு. வெறும் பெயரளவிலான வாரியமாக இல்லாமல், கொள்கை முடிவுகளில் குரல் கொடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவெடுத்தால், திருப்பூரின் அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கு அது புதிய பலமாக அமையும்.