Politics
தனியார் பல்கலை தொடங்க 100 ஏக்கர் இனி கட்டாயமில்லை: சட்ட மசோதா நிறைவேற்றம்

சென்னை: தனியார் பல்கலை தொடங்குவதற்கான நில தேவை குறைப்பு உள்ளிட்ட 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
தமிழக சட்டசபையில், உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தாக்கல் செய்த மசோதா:
தமிழ்நாடு தனியார் பல்கலை சட்டத்தின்படி, தனியார் பல்கலை தொடங்க, குறைந்தது 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் வேண்டும். நிலப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இதில் மாற்றங்கள் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் குறைந்தது 12 ஏக்கர், பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் குறைந்தது 18 ஏக்கர் நிலம், மற்ற பகுதிகளில் குறைந்தது 25 ஏக்கர் நிலம் என குறைக்க, அரசு முடிவு செய்து உள்ளது.
தனியார் பல்கலை அமைக்க தேவையான நிலையான அறக்கட்டளை நிதியை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், ஏற்கனவே உள்ள சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிவ்நாடார் பல்கலை, சாய் பல்கலை ஆகியவற்றுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை நியமிக்கும் மசோதா
2 வணிகர்களுக்கு வழங்கப்படும் மண்டி உரிம காலத்தை, ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கவும், இணையதள வழியே உரிமம் வழங்கவும் வகை செய்யும் சட்ட மசோதா
3 பந்தயம் கட்டுதல், சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தயம், பரிசு சீட்டு, இணையவழி பண சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்யும் சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
4 மைய சரக்குகள் மற்றும் சேவை வரிகள் சட்டம், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம் ஆகியவற்றில், ஒரே சீரான தன்மையை பேணுவதற்கான மசோதா
5 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி தவிர, 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை நீட்டிக்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
6 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாகனம், மாதந்திர வாகனப் படி 75 ஆயிரம் ரூபாய், தனி உதவியாளர் படி 25,000 ரூபாய் வழங்க, ஆண்டுக்கு 43 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 385 ரூபாய் தேவைப்படும். இதற்கு செயல் வடிவம் கொடுக்க, சம்பளம் வழங்கல் சட்டத்தில் திருத்த மசோதா
7 தேசிய கட்டட விதிகளுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய வழிமுறைகள் அடிப்படையில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் சட்டத் திருத்த மசோதா
8 விவசாய நிலங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த; கலெக்டரின் முன் அனுமதி பெறுவதற்கு விலக்கு அளிக்க; நகர், ஊரமைப்பு சட்டத் திருத்த மசோதா
9 மதிப்பு கூட்டு வரி தீர்ப்பாய உறுப்பினர், மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான வரம்பு மாற்றத்துக்கான மதிப்பு கூட்டு வரி சட்டத் திருத்த மசோதா.
இந்த ஒன்பது உட்பட 10 மசோதாக்களும் நேற்று குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டன.