Politics
திருக்கோவிலுாரில் பள்ளிகளுக்கு இடையே கலைத்திருவிழா

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருக்கோவிலுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான கலைத்திருவிழா போட்டி திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ., பழனிச்சாமி, நகராட்சி சேர்மன் முருகன், நகர மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 18 வகையான கலை போட்டிகள் நடந்தது. இதில் 108 பள்ளிகளைச் சேர்ந்த, 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், இளஞ்செழியன், ரமேஷ், ரவி, சீனிவாசன், செல்வகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சரளா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மகேஷ் நன்றி கூறினார்.