Politics
மிஸ்டர் கழுகு: NO தி.மு.க... NO த.வெ.க... தோழர்களின் ட்விஸ்ட் அரசியல்..!

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்யவைத்து, த.வெ.க-வில் அவர்களை இணைத்தபோதே சி.பி.ஐ., சி.பி.எம் மாநிலச் செயலாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
“தி.மு.க-வினரின் வரம்பு மீறிய பேச்சுக்கு, ‘யாகாவாராயினும் நாகாக்க’ எனக் கண்டித்திருக்கிறார் தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி. பரவாயில்லை...” என ‘எக்ஸ்’ தள செய்திகளை வாசித்தபடியே, அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். பூரண கொழுக்கட்டையும், கடலைப்பருப்பு பாயசமும் கொடுத்தோம். சுவைத்துவிட்டு, செய்திகளுக்குள் நுழைந்தார்.
“சென்னை பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஒன்பது மீனவ கிராமங்களும், சூழலியல் ஆர்வலர்களும் போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள். நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்திருக்கிறது. ‘இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் மீனவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டும்’ என்று உளவுத்துறை ‘நோட்’ போடவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவிலிருந்து தமிழக அரசு பின்வாங்க வாய்ப்பிருக்கிறதாம்.”
“இப்படியெல்லாம் பிரச்னை வரும் என முன்பே அதிகாரிகளுக்குத் தெரியாதா?”
“முதல்வரைத் தவறாக வழிநடத்துகிறார்களா எனத் தெரியவில்லை. த.வெ.க அரசுக்கு அடுத்த சிக்கலாக, `எதிர்வரும் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் ஆதரவு இல்லை’ என அறிவித்ததோடு, ‘தனித்துப் போட்டியிடுகிறோம்’ என ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்கள் இடதுசாரிகள். மதுராந்தகத்தில் சி.பி.எம் கட்சியும், தாராபுரத்தில் சி.பி.ஐ கட்சியும் போட்டியிடவிருக்கின்றன.”
“ஏன் இந்த திடீர் முடிவாம்?”
“அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்யவைத்து, த.வெ.க-வில் அவர்களை இணைத்தபோதே சி.பி.ஐ., சி.பி.எம் மாநிலச் செயலாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். ‘பெரும்பான்மையை அடைய த.வெ.க குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது’ என இரண்டாம் கட்ட தலைவர்கள் ஓப்பனாகவே விமர்சனம் செய்தார்கள். தற்போது, ராஜினாமா செய்தவர்களையே த.வெ.க வேட்பாளராக அறிவித்தது தோழர்களை உஷ்ணமாக்கிவிட்டது. ‘மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் த.வெ.க செய்த ஜனநாயகப் படுகொலையால் விளைந்த இந்த இடைத்தேர்தலில் அவர்களை ஆதரிக்க முடியாது’ என முடிவெடுத்திருக்கிறார்கள்.”
“ஓஹோ...”
“அதுமட்டுமல்ல, ‘தலைமைச் செயலாளர் சாய்குமாரை மாற்ற வேண்டும்’ எனத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் த.வெ.க அரசு செவிசாய்க்கவில்லை. அதில், சி.பி.எம் கடும் அப்செட். அந்தச் சூழலில், அமலாக்கத்துறையின் அறிக்கையை, சட்டமன்றத்தில் முதல்வர் வாசித்ததை அவர்கள் விரும்பவில்லையாம். ‘மத்திய அரசுக்கு இணக்கமாகப் போக விரும்பும் கட்சியை கம்யூனிஸ்ட்டுகள் ஆதரிப்பதா?’ என்ற கேள்வி மாநிலக்குழுக் கூட்டத்திலேயே எழுந்திருக்கிறது.”
“அது சரி... பேசாமல், தேர்தலைப் புறக்கணித்திருக்கலாமே!”
“அதுவும் ஆலோசிக்கப் பட்டிருக்கிறது. ‘பேசாமல் தி.மு.க-வுக்கு ஆதரவு அளித்துவிடலாம்’ என்று சிலர் பேச, ‘அப்படி குழப்பமான நிலைப்பாட்டை எடுக்க முடியாது’ என்றிருக்கிறார் பெ.சண்முகம். இறுதியாக, `No தி.மு.க., No த.வெ.க’ என்று முடிவெடுத்து, இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என அறிவித்திருக்கிறார்கள். அதை சி.பி.ஐ கட்சியும் வழிமொழிந்துவிட்டது. ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஆலோசித்து முடிவை மாற்றி எடுப்போம்...’ என்கிற அளவில்தான் தோழர்கள் இருக்கிறார்கள். ‘இரண்டு தொகுதிகளையும் வென்றுவிட்டால் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவே நமக்கு வேண்டாம்’ என்ற மனநிலைக்கு த.வெ.க-வும் வந்துவிட்டது.”
அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்களாமே?”
“ஆமாம். தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த த.வெ.க குண்டடம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபாலன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வபிரகாஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான நிர்வாகிகளும், தொண்டர்களும் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்கள். தாராபுரம் இடைத்தேர்தலில், சத்தியபாமாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதே இந்த விலகலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ‘தலைமை அவர்கள் விருப்பத்துக்கு முடிவெடுத்திருக்கிறது...’ எனக் கொந்தளிக்கிறார்கள் விலகியவர்கள். த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவுக்கு த.வெ.க-வினர் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு நிலவுவதால், ஆளும் தரப்பு பீதியில்தான் இருக்கிறது.”
“த.வெ.க-வில் இணைந்த அ.தி.மு.க மாஜியும் கடும் அப்செட்டாமே?”
“தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க முகமாக இருந்தவர் கடம்பூர் ராஜூ. கடந்த ஜூன் 6-ம் தேதி த.வெ.க-வுக்குத் தாவியவருக்கு எந்தப் பொறுப்பும் அளிக்கப்படாததால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். குற்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்குக் கட்சிப் பொறுப்பும், பலருக்கு செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பும் வழங்கிய த.வெ.க தலைமை, சமீபத்தில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு அரசுப் பொறுப்பும் வழங்கியது. ஆனால், கடம்பூர் ராஜூவுக்கு எந்தப் பொறுப்பும் கிடைக்கவில்லை. வ.உ.சி பிறந்தநாள் விழாவில், கட்சி சார்பில் மரியாதை செய்பவர்களின் பட்டியலில்கூட கடம்பூர் ராஜூவின் பெயர் இல்லை. முதன்மையானவருக்கு நண்பனான மாண்புமிகுதான் கடம்பூர் ராஜூவுக்கு எந்தப் பொறுப்பும் கிடைத்துவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறாராம்.”
“அந்த மாண்புமிகு மீது ஏகப்பட்ட புகார்கள் வரிசைகட்டுகின்றனவாமே!”
“ம்ம்... துறை சார்ந்த பணியிட மாற்றங்களுக்கும், லோக்கல் வசூலுக்கும் மச்சான் ஒருவரை நியமித்திருக்கிறார் எனச் சொல்லியிருந்தேன் அல்லவா... இப்போது, அரசுத் தரப்பு உதவியாளர் ஒருவரையும் தங்கள் ஆட்டத்தில் சேர்த்திருக் கிறார்களாம். மேலும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பொறுப்பில் மச்சானை அமர்த்த, முதன்மையானவர் அலுவலகத்தில் பெட்டிஷன் போட்டிருக்கிறாராம் அந்த மாண்புமிகு” என்ற கழுகாருக்கு, ஃபில்டர் காபி கொடுத்தோம். சுவைத்துவிட்டு, செய்திகளைத் தொடர்ந்தார்.
“தி.மு.க ஐடி விங் மாநிலச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்களாம் உதயநிதியின் ஆதரவாளர்கள். ‘சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் த.வெ.க-வை வெளுத்து வாங்குகிறார் உதய். ஆனால், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது பேச்சுகளைத் தீவிரமாகப் பரப்புவதில் சுணங்குகிறது ஐடி விங். மிசா விவகாரத்திலும், த.வெ.க-வைத் திருப்பி அடிப்பதில் சறுக்கிவிட்டனர். ‘டி.ஆர்.பி.ராஜாவைத் தூக்கிவிட்டு, முந்தைய ஆட்சியில் உண்மை சரிபார்ப்புக் குழுவில் பொறுப்பில் இருந்தவரை வைத்து ஐடி விங்கை நடத்தலாம்’ என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மாணவரணிச் செயலாளர் வீரமணியின் செயல்பாடுகள் மீதும் தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரையும் மாற்றிவிடுவார்கள்...’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்” எனக் கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்,
“இடைத்தேர்தல் தொடர்பாக, தேர்தல் பணிக்குழுப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் விஜய். அதில், தாம்பரம் எம்.எல்.ஏ-வும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சரத்குமார் பெயர் இடம்பெறவில்லை. செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் அவரை, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்காமல், கடலூர் மாவட்ட அமைச்சர் ராஜ்குமார், வேளாண்துறை அமைச்சர் வினோத் உள்ளிட்டவர்களை நியமித்திருக்கிறது த.வெ.க தலைமை. ‘விவகாரமான பவுடர் பயன்படுத்தினார் அமைச்சர் சரத்’ என்ற குற்றச்சாட்டு மறையாத நிலையில், அவரைத் தேர்தல் களத்திலிருந்து கட்சித் தலைமை கழற்றிவிட்டிருப்பது, அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது...” என்றுவிட்டு சிறகுகளை விரித்துப் பறந்தார்.
