ஜல்லிக்கட்டை முதல்வர் விஜய் நேசிக்கிறாரா இல்லையா கேட்கிறது அ.தி.மு.க.,
மதுரை: ''தமிழ் இனத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் முதல்வருக்கு அக்கறை இருந்தால் சட்டசபையில் ஜல்லிக்கட்டு போட்டியை கொச்சைப்படுத்தி பேசிய எம்.எல்.ஏ.,வை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டை முதல்வர் நேசிக்கிறாரா, இல்லையா'' என அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
சட்டசபையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் சோழவந்தான் த.வெ.க., எம்.எல்.ஏ., கருப்பையா பேசியதற்கும், த.வெ.க., அரசை கண்டித்தும் அ.தி.மு.க., சார்பில் அலங்காநல்லுார் வாடிவாசல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நகர் செயலாளர் செல்லுார் ராஜூ பேசுகையில், ''வரம் கொடுக்கும் சாமியின் தலையில் கையை வைத்த கதையாக காங்கிரஸ் தயவில் ஆட்சியை நடத்திக் கொண்டு அடுத்த பிரதமர் விஜய் தான் என்று கூறி வருகிறார்கள். பழனிசாமி சொல்வது போல் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்றுக்கூட சொல்வார்கள்'' என்றார்.




