ரயில் மறியல் போரா*ட்டம் ஒத்திவைப்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களின் நீண்டநாள் ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் வரும் 19-ந்தேதி சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தது. இதில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் கலந்துகொள்வதாக இருந்தது. இதனையொட்டி சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் சுபதர்சனி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் திருச்சி ரயில்வே கோட்ட வணிக பிரிவு மேலாளர் பிள்ளைக்கனி, உள்ளிட்ட ரயில்வே துறையினர். காவல்துறையினர், சிதம்பரம் ரயில் பயணிகள் நலச் சங்கம், வர்த்தகர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், விசிக, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கோயம்புத்தூர் – மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலைச் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தற்போதைய ரயில் அட்டவணையில் 45 நிமிட நேரப் பற்றாக்குறை இருப்பதால் ரயிலைச் சிதம்பரம் வரை இயக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு, மக்களின் தேவைக்கேற்ப ரயில் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளைப் பரிசீலித்து செப்.25-க்குள் பதில் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, செப்.19-ல் நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம் செப்.25 வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள் சாதகமான முடிவு கிடைக்காவிட்டால், அனைத்து கட்சிகளின் பங்கேற்புடன் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



