Politics
ரயில் மறியல் போராட்டம்: 25ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
சிதம்பரம்:ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட ரயில் மறியல் போராட்டம் சப் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சவார்த்தையால், 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை-கோவை செல்லும் ஜனதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 19ம் தேதி ரயில் பயணிள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் சப் கலெக்டர் சுபதர்ஷினி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பிள்ளைக்கனி, ரயில் பயணிகள் சங்க தலைவர் அப்துல்ரியாஸ், செயலாளர் அம்பிகாபதி, பொருளாளர் முத்து மற்றும் வர்த்தக சங்கத்தினர் சிவராமவீரப்பன், சட்ட ஆலோசகர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது. அதற்கு, அதிகாரிகள் தரப்பில், தற்போதைய ரயில் அட்டவணையில் 45 நிமிட நேரப் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டி, சிதம்பரம் வரை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றனர். அதற்கு பயணிகள் சங்கத்தினர், அட்டவணை மக்களுக்காகத்தான் என்றனர்.
பேச்சுவார்த்தையில், இறுதி முடிவு எட்டாத நிலையில், கோரிக்கையை பரிசீலிக்க வரும் 25 ம் தேதி வரை அதிகாரிகள் அவகாசம் கோரினர். அதனையேற்ற பயணிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தை 25ம் தேதிவரை ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.
