புறக்கணிக்கப்படும் தனித்தொகுதி எம்.எல்.ஏ.! - கொதிக்கும் மக்கள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக் கோட்டை தனித் தொகுதியின் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியனை, மாவட்ட பொறுப்பு அமைச்சர் முகமது பர்வேஸ் உட்பட அவரது சொந்தக் கட்சிக்காரர்களே புறக்கணித்து வருவதாக கந்தர்வக்கோட்டை தொகுதி மக்கள் வேதனையுடன் கூறிவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாஜி விஜயபாஸ்கரின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் கோலோச்சியது. இதனால் அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சராக இருந்த சுப்பிரமணியன், மாஜி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் ஓரங் கட்டியே வைத்திருந்தார் விஜயபாஸ்கர். ஒதுங்கியிருந்த பலரும் கடந்த சில ஆண்டுகளில் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். அந்த வகையில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சரும் கந்தர்வக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் த.வெ.க.வுக்குச் சென்றார். சட்டமன்றத் தேர்தலில் அவரை கந்தர்வக்கோட்டை தனித்தொகுதி சட்டமன்ற வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்தது. ஆனால் முகமது பர்வேஸின் ஆதரவாளர்களாக இருந்த த.வெ.க.வினர் அவருக்கு தேர்தல் பணிகள் செய்ய முன்வரவில்லை. இருந்தாலும் வெற்றிபெற்றார்.
அப்போதைய புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயலாளர் முகமது பர்வேஸ், இடையில் கட்சிக்கு வந்தவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டாமென மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதால் கந்தர்வக்கோட்டை வேட்பாளர் சுப்பிரமணியன், புதுக்கோட்டை வேட்பாளருக்கு கட்சி நிர்வாகிகளின் ஆதரவு குறைவாக இருந்தது. அவருக்கு சட்டமன்ற அனுபவமிருப்பதால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் முகமது பர்வேஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு தனக்கு அமைச்சர் பதவியை வாங்கிக்கொண்டார். பிறகு கந்தர்வக் கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் எந்த நிகழ்விலும் கலந்துகொள்வதை முகம்மது பர்வேஸ் தவிர்த்துவருகிறார். மற்றொரு பக்கம் அ.தி.மு.க.வில் பலரும் தங்களது பொது எதிரியாக விஜயபாஸ் கரைப் பார்த்து அங்கிருந்து வெளியேறி த.வெ.க வந்தனர். அ.தி.மு.க.வினரால் புறக்கணிக்கப்பட்ட மாஜி விஜயபாஸ்கரை கட்சித் தலைமை இணைத்துக்கொண்டு கட்சிப் பதவியும் கொடுத்ததால், அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க. வந்து எந்த பதவியும் பயனுமில்லாமல் இருக்கும் மாஜி ர.ர.க்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

