Politics
புறக்கணிக்கப்படும் தனித்தொகுதி எம்.எல்.ஏ.! - கொதிக்கும் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக் கோட்டை தனித் தொகுதியின் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியனை, மாவட்ட பொறுப்பு அமைச்சர் முகமது பர்வேஸ் உட்பட அவரது சொந்தக் கட்சிக்காரர்களே புறக்கணித்து வருவதாக கந்தர்வக்கோட்டை தொகுதி மக்கள் வேதனையுடன் கூறிவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாஜி விஜயபாஸ்கரின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் கோலோச்சியது. இதனால் அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சராக இருந்த சுப்பிரமணியன், மாஜி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் ஓரங் கட்டியே வைத்திருந்தார் விஜயபாஸ்கர். ஒதுங்கியிருந்த பலரும் கடந்த சில ஆண்டுகளில் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். அந்த வகையில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சரும் கந்தர்வக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் த.வெ.க.வுக்குச் சென்றார். சட்டமன்றத் தேர்தலில் அவரை கந்தர்வக்கோட்டை தனித்தொகுதி சட்டமன்ற வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்தது. ஆனால் முகமது பர்வேஸின் ஆதரவாளர்களாக இருந்த த.வெ.க.வினர் அவருக்கு தேர்தல் பணிகள் செய்ய முன்வரவில்லை. இருந்தாலும் வெற்றிபெற்றார்.
அப்போதைய புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயலாளர் முகமது பர்வேஸ், இடையில் கட்சிக்கு வந்தவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டாமென மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதால் கந்தர்வக்கோட்டை வேட்பாளர் சுப்பிரமணியன், புதுக்கோட்டை வேட்பாளருக்கு கட்சி நிர்வாகிகளின் ஆதரவு குறைவாக இருந்தது. அவருக்கு சட்டமன்ற அனுபவமிருப்பதால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் முகமது பர்வேஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு தனக்கு அமைச்சர் பதவியை வாங்கிக்கொண்டார். பிறகு கந்தர்வக் கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் எந்த நிகழ்விலும் கலந்துகொள்வதை முகம்மது பர்வேஸ் தவிர்த்துவருகிறார். மற்றொரு பக்கம் அ.தி.மு.க.வில் பலரும் தங்களது பொது எதிரியாக விஜயபாஸ் கரைப் பார்த்து அங்கிருந்து வெளியேறி த.வெ.க வந்தனர். அ.தி.மு.க.வினரால் புறக்கணிக்கப்பட்ட மாஜி விஜயபாஸ்கரை கட்சித் தலைமை இணைத்துக்கொண்டு கட்சிப் பதவியும் கொடுத்ததால், அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க. வந்து எந்த பதவியும் பயனுமில்லாமல் இருக்கும் மாஜி ர.ர.க்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், கந்தர்வக்கோட்டை தனித் தொகுதி என்பதால் எங்கள் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் தொகுதி மக்கள் எழுப்பியுள்ளனர். கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் கூட்டணியிலிருந்த சி.பி.எம். தோழர் சின்னத்துரை தி.மு.க. அமைச்சர்களுட னும், மா.செ.க்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளு டனும் இணக்கமாகவும் நட்பாகவும் இருந்ததால் தான் பல நலத்திட்டங்களை கந்தர்வக்கோட்டை தொகுதிக்குள் கொண்டுவந்து சேர்க்கமுடிந்தது.
இப்போதும் அந்தப் பணிகள்தான் தொகுதிக் குள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் தற்போது சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினரையே மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான முகமது பர்வேஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் புறக்கணித்து ஓரங்கட்டி வைத்திருப்பது வேதனையளிக்கிறது. புதுக்கோட்டையில் நடந்த 100 நாள் சாதனை பொதுக்கூட்டத்தில்கூட அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டார். ஆனால் கந்தர்வக் கோட்டை த.வெ.க சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்பில்லை. அதேநேரத்தில் கந்தர்வக் கோட்டையில் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை சுப்பிரமணியன் பிரம்மாண்ட மாக நடத்திக்காட்டினார்.
மேலும் விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பாக விராலிமலையில் நடந்த 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை மாஜி விஜயபாஸ்கர் நடத்தும்போது அமைச்சர் பர்வேஸ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நிழல் அமைச்சராக உள்ள அவரது அண்ணன் முகமது இப்ராகிம் அந்த மேடையில் அமர்ந்து அலங்கரித்தார்.
நாங்கள் பட்டியலின சமூகத்திற்கு அதிகமான வாய்ப்புகளை கொடுத்திருக்கிறோம் என்று சட்டமன்றத்தில் சமூக நீதி பேசிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள், ஒரு தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தன் கட்சி அமைச்சராலேயே புறக்கணிக்கப்படுவது தெரியாமலா இருக்கிறார்கள். அமைச்சர் முகமது பர்வேஸ் புறக்கணிப்பது கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியனை மட்டுமல்ல,…கந்தர்வக்கோட்டை தொகுதியை என்பதை முதலமைச்சரும், சமூக நீதி பேசிக்கொண்டிருக்கும் அமைச்சர்களும் உணர வேண்டும் என்கின்றனர் தொகுதி மக்கள்.
இதுகுறித்து கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் தரப்பினரிடம் கேட்டபோது, “தொடர்ந்து கந்தர்வக்கோட்டை தொகுதியை தனித்தொகுதி என்பதால் புறக்கணிக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் அமைச்சர் புறக்கணிக்கிறார். நாங்கள் அ.தி.மு.க.வில் யாரை எதிர்த்து வெளியே வந்தோமோ இன்று அவரை தன்னுடன் வைத்துக்கொண்டு எங்களை எதிர்க்கிறார் அமைச்சர். தேர்தல் காலத்தில் கைகொடுத்த எங்களையும், எங்கள் தொகுதி மக்களையும் புறக்கணிப்பது நல்லதல்ல. முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை வைத்து தொகுதிக்குத் தேவையானதை பெற்றுவருவோம். மாவட்ட அளவில் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவும் அழைப்பதில்லை. இதை யெல்லாம் பொதுச்செயலாளர் கவனத்திற்கு கொண்டுபோவோம்''’என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)