பருவமழையை நம்பி சாகுபடி பணியில் விவசாயிகள்... தீவிரம் :முன்கூட்டியே நீர்நிலைகளை சீரமைப்பது அவசியம்
ராமநத்தம்:வடகிழக்கு பருவமழையை நம்பி பயிர்களை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பருவமழை துவங்கும் முன் நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள், 200க்கும் அதிகமான துணை ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியினர் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதை சார்ந்த கூலித் தொழில்களை செய்து வருவாய் ஈட்டுகின்றனர். இப்பகுதி விவசாயிகள் ஆறு மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலம், நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் செடிகளை சாகுபடி செய்கின்றனர். மேலும், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழையின் போது கிடைக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, வரகு, எள், வேர்க்கடலையை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் தென் மேற்கு பருவமழை காலமான ஜூன்-செப்டம்பர் மாதங்களில் பெய்யும் மழையின் மூலம் குறுகிய கால பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். நடப்பாண்டு, 'எல் நினோ' தாக்கத்தால் தென் மேற்கு பருவமழை முழுமையாக பெய்யவில்லை. கடந்தாண்டின் அளவில் பாதி கூட மழையளவு இல்லாததால் தென்மேற்கு பருவமழையை நம்பிய விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

