டிஜிட்டல் உலகின் ஆளுமைகளுக்கு விகடன் சூட்டிய கிரீடம்!
‘`எல்லாருடைய டிரீம் கேர்ளாகவும் கயாடுதான் இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகையாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்’’ எனப் பாராட்டினார் வெங்கட் பிரபு.
டிஜிட்டல் உலகில் தங்களுக்கெனத் தனித்தடம் பதித்து, வைரலாகி பட்டையைக் கிளப்பிவரும் கலைஞர்களின் சங்கமம்... சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 5-ம் தேதி களைகட்டியது. தமிழக மக்களின் பேராதரவோடு `ஆனந்த விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026’ விழா கோலாகலமாக அரங்கேற, டிஜிட்டலில் கலக்கும் நட்சத்திரங்கள் முதல் அந்தக் களத்தின் முன்னணிப் படைப்பாளிகள் வரை ஒரே மேடையில் திரண்டனர். அந்தப் பரபரப்பான மேடையில் அரங்கேறிய அழகிய தருணங்கள்... இங்கே!
தனது வேடிக்கையான வீடியோக்களால் டிஜிட்டல் ரசிகர்களைக் கவர்ந்த ஜெனி எம்ஜே-வுக்கு ‘Best Solo Creator - Female’ விருதை சின்னத்திரை நடிகை சுஜிதா வழங்கி சிறப்பித்தார். சுஜிதாவுக்கும் ஜெனிக்கும் தி ஹெரிட்டேஜ் கிரியேட்டர் நிறுவனரும், முற்றம் சி.இ.ஓ-வுமான எம்.ஆர்.சுரேஷ் நினைவுப்பரிசு வழங்கினார். நெகிழ்ந்து பேசிய ஜெனி, ‘`விகடன் எப்போதுமே என் இதயத்துக்கு நெருக்கமானது. 2022-ல் அவள் விகடனில் என்னைப் பற்றி ஒரு சிறிய செய்தி வந்தது. கடந்த வருடம் நாமினேஷனில் இருந்தேன். இந்த வருடம் விருதை வென்றுவிட்டேன்; பெருமையாக இருக்கிறது’’ என்றார்.




