Arts, culture, entertainment and media
டிஜிட்டல் உலகின் ஆளுமைகளுக்கு விகடன் சூட்டிய கிரீடம்!

‘`எல்லாருடைய டிரீம் கேர்ளாகவும் கயாடுதான் இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகையாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்’’ எனப் பாராட்டினார் வெங்கட் பிரபு.
டிஜிட்டல் உலகில் தங்களுக்கெனத் தனித்தடம் பதித்து, வைரலாகி பட்டையைக் கிளப்பிவரும் கலைஞர்களின் சங்கமம்... சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 5-ம் தேதி களைகட்டியது. தமிழக மக்களின் பேராதரவோடு `ஆனந்த விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026’ விழா கோலாகலமாக அரங்கேற, டிஜிட்டலில் கலக்கும் நட்சத்திரங்கள் முதல் அந்தக் களத்தின் முன்னணிப் படைப்பாளிகள் வரை ஒரே மேடையில் திரண்டனர். அந்தப் பரபரப்பான மேடையில் அரங்கேறிய அழகிய தருணங்கள்... இங்கே!
தனது வேடிக்கையான வீடியோக்களால் டிஜிட்டல் ரசிகர்களைக் கவர்ந்த ஜெனி எம்ஜே-வுக்கு ‘Best Solo Creator - Female’ விருதை சின்னத்திரை நடிகை சுஜிதா வழங்கி சிறப்பித்தார். சுஜிதாவுக்கும் ஜெனிக்கும் தி ஹெரிட்டேஜ் கிரியேட்டர் நிறுவனரும், முற்றம் சி.இ.ஓ-வுமான எம்.ஆர்.சுரேஷ் நினைவுப்பரிசு வழங்கினார். நெகிழ்ந்து பேசிய ஜெனி, ‘`விகடன் எப்போதுமே என் இதயத்துக்கு நெருக்கமானது. 2022-ல் அவள் விகடனில் என்னைப் பற்றி ஒரு சிறிய செய்தி வந்தது. கடந்த வருடம் நாமினேஷனில் இருந்தேன். இந்த வருடம் விருதை வென்றுவிட்டேன்; பெருமையாக இருக்கிறது’’ என்றார்.
புத்தகங்களை அறிமுகப்படுத்துவ தோடு, அவற்றின் கருத்துகளையும் சமூகப் பார்வையோடு விமர்சித்து வாசகர்களிடம் கொண்டு சேர்த்த ஆர்ஜே ஆனந்திக்கு ‘Digital Icon’ விருதை இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் நடிகை ரோஜாவும் இணைந்து வழங்கினர். ஆனந்திக்கு சீமான் டியூஷன்ஸ் அண்ட் டுட்டோரியல் உரிமையாளர் ஸ்ரீ சீமான் அன்பளிப்பு வழங்கினார்.
நகைச்சுவையும் புனைவும் கலந்த வீடியோக்களால் டிஜிட்டல் பார்வையாளர் களைத் தொடர்ந்து மகிழ்வித்துவரும் ‘Finally’ சேனலுக்கு ‘Best Fiction Channel’ விருதை நடிகர் ரியோ வழங்கினார். தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் ஏரியா மேலாளர் கிஷோர்குமார் ரியோவுடன் இணைந்து `ஃபைனலி’ டீமுக்கு கிஃப்ட் வழங்கினார். அடுத்ததாக, அன்றாட நிகழ்வுகளை அசத்தலான டைமிங்குடன் நகைச்சுவை ஸ்கிரிப்ட்டுகளாக மாற்றி, பார்வையாளர்களைக் கவர்ந்த ‘Kaathadi Club’ குழுவுக்கு ‘Best Entertainment Channel’ விருதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வழங்கினார். காத்தாடி கிளப் குழுவுக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ரூபிஅபெக்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் தலைவர் ஆர்.சந்திரசேகரனும், ரூபிஅபெக்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் துரை சிங்கமும் இணைந்து கிஃப்ட் வழங்கிச் சிறப்பித்தனர்.
தனது வாழ்க்கை, பயணம், குடும்ப தருணங்களை இயல்பான வீடியோக்களாகப் பகிர்ந்து ரசிகர்களுடன் இணைந்திருக்கும் நட்சத்திரா நாகேஷுக்கு ‘Best Solo Celebrity Channel - Female’ விருதை நடிகை கயல் ஆனந்தியும், நிவா புபா ஹெல்த் இன்ஷூரன்ஸ் துணைத் தலைவர் துமு ஜோகிராஜுவும், நிவா புபா ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏரியா ஹெட் பாஸ்கரனும் இணைந்து வழங்கினர்.
தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்குரிய இளம் நட்சத்திரமாக மாறியிருக்கும் கயாடு லோஹருக்கு ‘Most Celebrated Star in Digital’ விருதை இயக்குநர் வெங்கட் பிரபு அளிக்க, 1.8 லட்சம் மதிப்பிலான, Samsung Galaxy Z Fold 8 கிஃப்ட்டை சத்யா நிறுவனத்தின் ஜாக்சன் சாமுவேல் வழங்கினார். ‘`எல்லாருடைய டிரீம் கேர்ளாகவும் கயாடுதான் இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகையாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்’’ எனப் பாராட்டினார் வெங்கட் பிரபு.
கிரிக்கெட், சினிமா, அன்றாட நிகழ்வுகளைத் தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் கன்டென்ட்டாக மாற்றிய ‘Lungi Boys’ குழுவுக்கு ‘Most Celebrated Channel of the Year’ விருதை நடிகர் அருண் விஜய் வழங்க, சத்யா நிறுவனத்தின் ஜாக்சன் சாமுவேல் 1.35 லட்சம் மதிப்பிலான, iPhone 17 Pro கிஃப்டை அளித்தார்.
வாகனங்களின் தரம், பயன்பாடு, நிறை, குறைகளை மக்களின் மொழியில் நேர்மையாக எடுத்துச் சொல்லும் `Motowagon’ சேனலுக்கு ‘Best Automobile Channel’ விருதை, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வழங்க, ஜிடிஎன் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இயக்குநர் கே.ஆர்.வெங்கடேஷ் நினைவுப்பரிசு வழங்கினார்.
அர்த்தமுள்ள உரையாடல்களின் வழியே பல்வேறு மனிதர்களின் அனுபவங்களையும் எண்ணங்களையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்த கோபிநாத்துக்கு ‘Sensational Channel of the Year’ விருதை எம்.எல்.ஏ-வான சௌமியா அன்புமணி வழங்கினார். கோபிநாத்துக்கும் சௌமியாவுக்கும் பிராமினன்ஸ் விண்டே சிஸ்டம்ஸ் இயக்குநர் இந்துகுமாரி இனியன் அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார்.
சமையலைத் தனது அடையாளமாக மாற்றி, டிஜிட்டல் உலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய ‘Samayal with Sharon’ சேனலுக்கு ‘Best Cooking Channel’ விருதை சௌமியா அன்புமணி வழங்க, ஷரோனுக்கு ஸ்ரீ பேபி பிராப்பர்ட்டீஸ் அண்ட் ஜென்விஸ்டாஸ் ரியால்ட்டி சிஇஓ டாக்டர் ஓம் பிரகாஷ் கிஃப்ட் வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் பயணித்து உணவுகளையும், அவற்றின் பின்னணியில் இருக்கும் மனிதர்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திவரும் செஃப் தீனாவுக்கு ‘Best Solo Celebrity Channel - Male’ விருதை நடிகர் தலைவாசல் விஜய் வழங்கினார். இவர்கள் இருவருக்கும் அரோமா பிரீமியம் டெய்ரி புராடக்ட்ஸ் நிர்வாகப் பிரதிநிதி என்.நவீன்குமார், பிராந்திய விற்பனை மேலாளர் ஏ.சரவணக்குமார் ஆகியோர் இணைந்து அன்பளிப்பு வழங்கினர்.
கிராமத்துச் சமையலை உலக அளவில் கொண்டு சென்று தமிழின் அடையாளமாக மாற்றிய `Village Cooking Channel’ குழுவுக்கு ‘Digital Icon’ விருதை அமைச்சர் ராஜ்மோகன் வழங்க, சென்னை அபாசிக்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஆச்சா ஆறுமுகசாமி கிஃப்ட் வழங்கிச் சிறப்பித்தார்.
பரபரப்பான திரைக்கதையாலும், அழுத்தமான கதாபாத்திரங்களாலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த ‘குற்றம் புரிந்தவன்’ தொடருக்கு ‘Best Web Series’ விருதை மில்லியன் டாலர் நிறுவனத் தயாரிப்பாளர் யுவராஜும், இயக்குநர் இரா.சரவணனும் வழங்கினர். இந்த மூவருக்கும் ரூபிஅபெக்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் தலைவர் ஆர்.சந்திரசேகரனும், ரூபிஅபெக்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் துரை சிங்கமும் கிஃப்ட்டுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.
தங்களின் குடும்ப வாழ்க்கை, பயணம், மகிழ்ச்சியான தருணங்களை இயல்பான வீடியோக்களாகப் பகிர்ந்துவரும் மைனா விங்ஸ் சேனலுக்கு ‘Best Couple Celebrity Channel’ விருதை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். ராஜ்மோகனுக்கும், மைனா டீமுக்கும் திண்டுக்கல் கயல் அக்ரோ ஃபுட்ஸ் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.கதிரேசன் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
‘`அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் நான் அண்ணன்தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை’’ என மேடையில் கலகலப்பாகப் பேசிய ராஜ்மோகன், ‘`புதன்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் இடையில் எனக்கு எப்போதுமே விகடன்கிழமைதான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே மேடையில் கிடைத்த வாய்ப்புதான் இன்று சட்டமன்றத்தில் பேசும் அளவுக்கு என்னை வளர்த்த பயணத்துக்கான விதையைப் போட்டது’’ என விகடனுடனான தனது பந்தத்தை நினைவுகூர்ந்தார்.
டிஜிட்டல் தளத்தில் தனது இயல்பான நடிப்பாலும் தனித்துவமான கதாபாத்திரங்களாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பூஜாவுக்கு ‘Best Performer - Female’ விருதை திரைப்பட இயக்குநர் பாரி இளவழகன் வழங்கினார். பூஜாவுக்கு ஹப்கிராஃப்ட் மேனேஜிங் பார்ட்னர்ஸ் ஸ்ரீகாந்த், மகேஷ் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி, சிறப்பித்தனர்.
பிஸ்கட்ஸ் வித் டீ சேனலுக்கான `Special Mention’ விருதை விஷ்ணுவரதன் மற்றும் பிரியங்காவுக்கு செஃப் தீனாவும், ஸ்ரீ ஜனனி கேட்டரிங் சர்வீசஸ் நிர்வாக இயக்குநர் எம்.எஸ். ஹரீஷும் இணைந்து வழங்கினர்.
`Best Web Series - Long Format’ விருதை ரிசார்ட் டீமுக்கு திரைப்பட இயக்குநர் ஹெச்.வினோத் வழங்கினார். விருதைப் பெற்றுப் பேசிய ‘ரிசார்ட்’ தயாரிப்பாளர், ``எங்கள் தொடருக்கு விகடன் விருது கிடைத்தது படக்குழுவினரிடையே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது எங்களது குழுவுக்கு கிடைக்கும் மூன்றாவது விகடன் விருது’’ என்று பெருமிதப்பட்டார்.
அப்போது, ரிசார்ட் டீமுக்கு ஸ்ரீ பேபி பிராப்பர்ட்டீஸ் அண்ட் ஜென்விஸ்டாஸ் ரியால்ட்டி பார்ட்னரும் நிர்வாக இயக்குநருமான சதீஷ்குமாரும், ஸ்ரீ பேபி பிராப்பர்ட்டீஸ் அண்ட் ஜென்விஸ்டாஸ் ரியால்ட்டி சி.இ.ஓ டாக்டர் ஓம் பிரகாஷும் இணைந்து நினைவுப்பரிசை வழங்கினர்.
`Sensational Performer of the yea’ விருதை நடிகை பிரியங்கா மோகனுக்கு திரைப்பட இயக்குநர் ஹெச்.வினோத் வழங்க, தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் சீனியர் மேனேஜர் அருணும், தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் ஏரியா மேனேஜர் கிஷோர்குமாரும் இணைந்து நினைவுப்பரிசை வழங்கினர். `` ‘மேட் இன் கொரியா’ படத்துக்காக முதன்முறையாக விகடன் விருது பெற்றது மகிழ்ச்சி’’ என பிரியங்கா மோகன் தெரிவித்தார்.
சுதர்சன் காந்தி, கீகீ இணைந்து தொகுத்து வழங்கிய விகடன் டிஜிட்டல் விருதுகள் நிகழ்வில், விகடன் வாசகர்கள், அரசியல், வெள்ளித்திரை, சின்னத்திரை, சமூக வலைதளம் உள்ளிட்ட பல்துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்!
