மேலுார் -- காரைக்குடி 4 வழிச்சாலையில் பிராமணம்பட்டி டோல்கேட்டில் சோதனை வாகன கட்டண வசூலிப்பு துவங்கவில்லை
திருப்புத்துார்: மேலுார்- - காரைக்குடி நான்கு வழிச்சாலையில் பிராமணம்பட்டி சுங்கச்சாவடியில் வாகன கட்டணத்தொகைக்கான சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது. வாகனங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
மேலுார் - -காரைக்குடி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை எண் : 338 சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வழியாக செல்கிறது. ஆறு ஆண்டுகால திட்டப்பணி பூர்த்தியடைந்த நிலையில் தற்போது வாகனங்கள் இந்த நான்கு வழிச்சாலையில் செல்லத் துவங்கியுள்ளன. இந்த ரோட்டில் திருப்புத்துாரிலிருந்து 6 கி.மீ., துாரத்தில் பிராமணம்பட்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இருபுறமும் தலா நான்கு வழிகளில் வாகனங்கள் செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.
சென்சார் மூலம் இயங்கும் இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் வந்து நின்றவுடன் திரையில் கட்டணத்தொகை தெரியும். தானாக கட்டணம் வசூலித்த பின் வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதுபோன்று இருபுறமும் தலா 3 வழிகளில் சென்சார் முறையில் தானியங்கியாக ஆட்கள் இல்லாமல் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு தணிக்கையாகிறது.


