அணையும் தீப்பெட்டித் தொழில்... அதிகரிக்கும் சீன லைட்டர் விற்பனை!
சுமார் 20 தீப்பெட்டிகளின் பயன்பாட்டை ஒரு லைட்டர் ஈடுகட்டுகிறது. மாதம் ரூ.500 கோடி மதிப்பில் உற்பத்தியாகிவந்த தீப்பெட்டிகளின் விற்பனை, லைட்டர்களால் ரூ.100 கோடி வரை பாதிக்கப்பட்டிருக்கிறது
ஒருகாலத்தில் சமையலறையிலும் கடைகளிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த தீப்பெட்டி, இன்று ஒரு சிறிய பிளாஸ்டிக் லைட்டரிடம் சந்தையை இழந்துவருகிறது. சீனாவிலிருந்து வரும் மலிவு விலை லைட்டர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதால், தமிழகத்தின் பாரம்பர்ய தீப்பெட்டித் தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டுவருகிறது. இதனால், இந்தத் தொழிலை நம்பியிருக்கும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, சங்கரன்கோவில், குடியாத்தம், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடக்கிறது. 150 முழு இயந்திர ஆலைகள், 500-க்கும் மேற்பட்ட பகுதி இயந்திர ஆலைகள், 2,000-க்கும் மேற்பட்ட பேக்கிங் சார்பு ஆலைகள் இயங்கிவருகின்றன. இவற்றில் சுமார் 80 சதவிகித உற்பத்தி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் நடைபெறுகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் இந்தத் தொழிலை நம்பியிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். தமிழகத் தீப்பெட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.




