‘‘எதுக்கு வம்பு வேலு!’’ - கொதிக்கும் உடன்பிறப்புகள்...
வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு போன்றவர்கள் கடந்தகாலத்தில் அப்போதைய அ.தி.மு.க-வுக்கு, குறிப்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக, காட்டமான விமர்சனங்களைச் சட்டமன்றத்தில் முன்வைத்தார்கள்
கண்டுகொள்ளுமா தலைமை?
“எல்லோரும் ஏவினால்தான் வேலை பார்ப்பார்கள். ஆனால், இவர் யாரும் ஏவாமலேயே எனக்காக வேலை பார்ப்பதால்தான், ‘எ.வ.வேலு’ என்று பொருத்தமான பெயருடன் இருக்கிறார்” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் எ.வ.வேலு. ஆனால், இப்போது ஆளுங்கட்சியினரின் விமர்சனங்களுக்கு, சட்டமன்றத்தில் காட்டமாக பதிலடி கொடுக்காமல், ‘எதுக்கு வம்பு?’ என்று ஒதுங்கிச் செல்கிறார் என்று எ.வ.வேலுவுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே கொந்தளிக்கிறார்கள். “எங்கள் தலைவர் தொடங்கி கட்சியினர் வரை ஆளுங்கட்சியினர் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். பதிலுக்கு இறங்கி அடிக்க வேண்டியவர், வழக்குகளுக்கு அஞ்சி பம்மிக்கொண்டிருக்கிறார்” என்கிறார்கள் அதிருப்தியில் இருக்கும் உடன்பிறப்புகள்.
த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதங்களின்போதே, தி.மு.க கொறடாவான எ.வ.வேலுவின் மீது, அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். தற்போது, மானியக் கோரிக்கை விவாதங்களுக்குப் பிறகு, எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல், தி.மு.க தலைமையும் அவர்மீது கடும் கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



