Politics
‘‘எதுக்கு வம்பு வேலு!’’ - கொதிக்கும் உடன்பிறப்புகள்...
வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு போன்றவர்கள் கடந்தகாலத்தில் அப்போதைய அ.தி.மு.க-வுக்கு, குறிப்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக, காட்டமான விமர்சனங்களைச் சட்டமன்றத்தில் முன்வைத்தார்கள்

கண்டுகொள்ளுமா தலைமை?
“எல்லோரும் ஏவினால்தான் வேலை பார்ப்பார்கள். ஆனால், இவர் யாரும் ஏவாமலேயே எனக்காக வேலை பார்ப்பதால்தான், ‘எ.வ.வேலு’ என்று பொருத்தமான பெயருடன் இருக்கிறார்” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் எ.வ.வேலு. ஆனால், இப்போது ஆளுங்கட்சியினரின் விமர்சனங்களுக்கு, சட்டமன்றத்தில் காட்டமாக பதிலடி கொடுக்காமல், ‘எதுக்கு வம்பு?’ என்று ஒதுங்கிச் செல்கிறார் என்று எ.வ.வேலுவுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே கொந்தளிக்கிறார்கள். “எங்கள் தலைவர் தொடங்கி கட்சியினர் வரை ஆளுங்கட்சியினர் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். பதிலுக்கு இறங்கி அடிக்க வேண்டியவர், வழக்குகளுக்கு அஞ்சி பம்மிக்கொண்டிருக்கிறார்” என்கிறார்கள் அதிருப்தியில் இருக்கும் உடன்பிறப்புகள்.
த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதங்களின்போதே, தி.மு.க கொறடாவான எ.வ.வேலுவின் மீது, அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். தற்போது, மானியக் கோரிக்கை விவாதங்களுக்குப் பிறகு, எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல், தி.மு.க தலைமையும் அவர்மீது கடும் கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது குறித்துப் பேசும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், “சட்டமன்றத்தில் கொறடா என்பது மிகவும் முக்கியமான பொறுப்பு. ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு போன்றவர்களை விட்டுவிட்டு, விசுவாசமாக இருப்பார் என எ.வ.வேலுவுக்குக் கொடுத்தார் எங்கள் தலைவர். ஆனால், அவர் ஆரம்பம் முதலே ஆளுங்கட்சியோடு இணக்கமாகவே செயல்படுகிறார். முக்கியமாகத் திருப்பியடிக்கவேண்டிய இடங்களிலெல்லாம், கன்டென்ட் இல்லாமல் ஏதேதோ பேசி விஷயத்தை மழுங்கடித்துவிடுகிறார். இவரை வைத்தே ஆளுங்கட்சியினர் ஸ்கோர் செய்துவருகிறார்கள்.
‘லாட்டரி மார்ட்டினிடம் 900 கோடி வாங்கினார் எங்கள் தலைவர்’ என அமைச்சர் ஆதவ், காட்டமான விமர்சனங்களை முன்வைக்கிறார். இவர் எழுந்து, ‘மார்ட்டின் எங்களுடைய நீண்டகால நண்பர்’ என்கிறார். மரிய வில்சன் பேசியதற்குக்கூட, காட்டமாக பதிலடி கொடுக்காமல், ‘எங்க அண்ணன் மாப்பிள்ளை இவரு. அதனால எனக்கு இவரை முன்னாடியே தெரியும். அவர் இங்கிலீஷ் மீடியத்தில்தான் படித்தார்’ என மரிய வில்சனுக்கு வக்காலத்து வாங்குகிறார்.
தனிப்பட்ட பழக்க வழக்கம் என்பது வேறு, அரசியல் என்பது வேறு. எங்கள் சின்னவரின் (உதயநிதி) நண்பர் சுஜய் ரெட்டி. ஆனால், அரசியல் என வந்தபோது அவர்மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார் சின்னவர். ஆனால், எ.வ.வேலுவோ மானியக் கோரிக்கையின்போது பல இடங்களில் கட்சியை விட்டுக்கொடுத்துவிட்டார்.
சபாநாயகர் என்ன சொன்னாலும் வேக வேகமாகத் தலையாட்டுகிறார். அது மட்டுமல்ல... ‘எங்க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லாததால்தான் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கிறோம்’ என்று இவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைப்போலப் பேசுகிறார். த.வெ.க எம்.எல்.ஏ-க்களெல்லாம் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். சட்டமன்றத்துக்குள்ளேயே கே.என்.நேரு, கோவி செழியன் என யாரையும் பேசவிடுவதில்லை. எல்லோரிடமும் மூஞ்சியைக் காட்டுகிறார். இவரும் ஒழுங்காகச் செயல்படுவதில்லை” என்று ஆதங்கப்பட்டார்கள்.
“வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு போன்றவர்கள் கடந்தகாலத்தில் அப்போதைய அ.தி.மு.க-வுக்கு, குறிப்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக, காட்டமான விமர்சனங்களைச் சட்டமன்றத்தில் முன்வைத்தார்கள். அதனால், அவர்கள்மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. அப்படியொரு சூழலில், தான் சிக்கிக்கொள்ளக் கூடாது என நினைக்கிறார் வேலு” என்றவர்கள், அது குறித்து விரிவாக விளக்கினார்கள்.
“சிங்கப்பூர் சிகிச்சைக்குச் சென்று வந்த பிறகு முழுவதுமாகவே மாறிப்போனார் அண்ணன் வேலு. அது மட்டுமல்ல, எங்கள் கட்சியில் இலக்கியப் பேரவையில் மாநில அளவில் பொறுப்பில் இருந்தவர், தற்போது த.வெ.க-வுக்குச் சென்றிருக்கிறார். அவரின் கணவர், அண்ணன் வேலுவுக்கு மிகவும் நெருக்கமானவர். தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் முக்கிய பவர் சென்டராக இருந்த அந்த மாநில நிர்வாகியின் குடும்பத்தைவைத்து, தன்மீது சட்டரீதியாக த.வெ.க ஏவத் தீர்மானித்திருக்கும் அம்புகளை மழுங்கச் செய்யும் வேலையை வேலு செய்துவருகிறார்.
ஆளுங்கட்சிக்கு, வழக்குகளுக்கு பயந்து அண்ணன் வேலு எவ்வளவு அடக்கி வாசித்தாலும், த.வெ.க சும்மாவிடுவதாக இல்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 80 பணிகளுக்கு 2,000 கோடி ரூபாய்க்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கு, சட்டசபையின் அனுமதி பெறப்படவில்லை. இந்த விவகாரத்தை உரிமைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். மறுபுறம், சட்டமன்றத்தில் இவருடைய செயல்பாடுகளைப் பார்த்து தலைமையும் கூப்பிட்டு விளக்கம் கேட்டிருக்கிறது. ஆனால், ‘உடனடியாகத் தடாலடியாகப் போகக் கூடாது, அ.தி.மு.க-வுடன் கடந்தகாலத்தில் எப்படி நடந்துகொண்டோமோ, அப்படியே போவோம்’ என்று கூறியிருக்கிறார். வேலுவின் பதிலைக் கேட்டு தலைமை இன்னமும் அப்செட்டில் இருக்கிறது” என்கிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க எ.வ.வேலுவைத் தொடர்புகொண்டோம். ‘‘ஆனால், எந்த பதிலும் சொல்லவில்லை. இல்லை. ‘எதற்கு வம்பு’ என்று இருக்கிறாரோ என்னவோ?
