பார்வையற்ற ஜோடி காதல் திருமணம்: வாழ்த்த குவிந்த மாற்று திறனாளிகள்
கோவை:''பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது...'' என, தாலிக்கட்டி முடிந்ததும், தன் காதல் கணவர் விஜயின் கை பிடித்தபடி இந்துமதி பாடிய போது, சிங்காநல்லுார், செல்லாண்டியம்மன் கோவில் வளாகமே ஒரு நிமிடம் நிசப்தமானது.
அம்மனை தரிசிக்க வந்தவர்கள், பார்வையற்ற அத்தம்பதிகளை மனதார வாழ்த்தினர். நாமும் வாழ்த்திவிட்டு விசாரித்தோம். முதலில் விஜய் பேசினார்:
''இருவரும் பட்டதாரிகள். 4 ஆண்டுக்கு முன் சந்தித்தோம்; நண்பர்கள் ஆனோம். நிறைய பேசினோம். பிறந்ததில் இருந்தே எங்களுக்கு பார்வை கிடையாது. தொட்டு, உணர்ந்து தான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வோம். கற்பனைக்கோ, கனவுகளுக்கோ இங்கே இடமில்லை. இந்துவின் கை பிடிக்கும் போதெல்லாம், புதிய உலகத்திற்குள் இருப்பதாக தோன்றும். ஒரு நாள் பேசாத போதும், தனிமையில் இருப்பதாக உணர்ந்தோம். காதலை சொல்லி கொண்டதில்லை என்றாலும் மனம் முழுக்க இந்து தான் இருக்கிறாள்..'' என்றார் விஜய்.


