“எல்லாமே ரீல்ஸ்... ரீல் விட்டே ஆட்சி நடத்துகிறார்கள்” - தவெகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
திருச்சியில் அதிமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சிப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதன் பின்னர் அங்கு பேசிய அவர், “இந்த ஆட்சியில் எல்லாம் ரீல்ஸ்..ரீல் விட்டே காலத்தை கழிக்கிறார்கள். ஆட்சி வருவதற்கு முன்பு ரீல்ஸ் தான், ஆட்சிக்கு பின்பும் ரீல்ஸ் தான். கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகள் தான் ஆகிறது, ஒரு துரும்பை கூட தமிழ்நாட்டு மக்களுக்காக எடுத்து வைக்கவில்லை. புயல், வெள்ளம், வறட்சி எதாவது நிவாரணம் கொடுத்தார்களா? அல்லது மக்களை போய் பார்த்தார்களா? எதுவுமே செய்யாமல் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி. எந்த ஒரு உழைப்பும் இந்த நாட்டு மக்களுக்கு வழங்காமல், ஆட்சிக்கு வந்த அரசாங்கம்தான், தமிழக வெற்றி கழகம்.
அதிமுக 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி, நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கிய கட்சி. டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சட்டப்பூர்வமாக இந்த மக்களுக்கு அதிகாரத்தை பெற்று தந்த கட்சி அதிமுக கட்சி. மிட்டாய் கொடுப்பது போன்று எம்.எல்.ஏக்களை ஏமாற்றி வாங்கிவிட்டனர். இன்றைக்கு முதலமைச்சர் தொழில் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்று வெளிநாடு சென்றிருக்கிறார். நான் கூட பரவாயில்லையே, ஆட்சிக்கு வந்த உடனே முதலீட்டை ஈர்க்கப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால், பத்திரிகையில் போட்டோ மாறி வந்திருக்கிறது. யாருடைய போட்டோ என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தொழில் முதலீட்டை எப்படி ஈர்க்கிறார்கள் பாருங்கள்..
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த உடனே சிறு குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி சொன்னார்கள். விவசாயிகளும் நம்பினார்கள். ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 5 ஏக்கர் குறைவாக இருக்கிற விவசாயிகள் 1 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தால் அதில் ரூ.75,000 தான் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணிக் கட்சிகள் ஆதரவை விலக்கினால், தவெக அரசு கவிழும்” என்று பேசினார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
