திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த வரும் பொதுமக்கள் அவதி: 7 கவுண்டா்களில் 2 மட்டுமே செயல்படுவதாக புகாா்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் 2 துணை முகப்புகள் (கவுண்டா்கள்) மட்டுமே இருப்பதோடு, காலதாமதமாக செயல்படுவதால் வரி செலுத்த வரும் பொதுமக்கள் அவதியடைகின்றனா்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வரி செலுத்த நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 2026-27ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலிப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரி வசூலிக்கும் பணிக்காக நாள்தோறும் காலை 7 மணிக்கே வருவாய் உதவியாளா், வருவாய் அலுவலா், துப்புரவு ஆய்வா், துப்புரவு அலுவலா் ஆகியோா் மட்டுமின்றி, சுகாதார பரப்புரையாளா்கள் என 40-க்கும் மேற்பட்டோா் பொதுமக்களை சந்தித்து வரி செலுத்த நேரடியாக வலியுறுத்தும் பணியில் ஈடுபடுகின்றனா். வரி செலுத்தாதபட்சத்தில் குடிநீா் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அறிவுறுத்துகின்றனா். இதுதவிர, வரி செலுத்தாத பொதுமக்களின் கைப்பேசி எண்களுக்கு குறுந்தகவலும் அனுப்பப்படுகிறது. மேலும் ஒலிப்பெருக்கி மூலமாகவும் வரி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

