மாநகராட்சி வரி வசூல் மையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை
திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி வரிவசூல் மையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் வரி செலுத்த வரும் பொதுமக்கள் நேர விரயம் காரணமாக திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் 2026- - 27ம் ஆண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியன வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி வசூல் பணியில் வருவாய் அலுவலர், உதவியாளர், துப்புரவு அலுவலர், ஆய்வாளர், சுகாதார பரப்புரையாளர்கள் என 40 க்கும் மேற்பட்டோர் தினசரி காலை 7:00 மணி முதல் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வரி செலுத்த வலியுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வரி செலுத்த தவறும் நிலையில் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நினைவூட்டலுக்காக வரி பாக்கி, நீண்டநாள் வரி நிலுவை உள்ளவர்களின் அலைபேசி எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பியும், ஒலிபெருக்கி மூலமாகவும் வரி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் வரி செலுத்துவதற்கு காலை 9:00 மணி முதலே மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குவிகின்றனர். வரி வசூல் மையத்தில் மொத்தம் 7 கவுண்டர்கள் உள்ள நிலையில் அதில் இரண்டில் மட்டுமே வரி வசூல் நடக்கிறது.
வரி வசூல் பணியாளர்கள் காலை 11:00 மணிக்கு பின்பே கவுண்டர்களுக்கு வந்து பணியை துவங்குவதால் பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பணியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள், அலுவலர்கள் வரி செலுத்தாமல் திரும்பிச்செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
