ரூ. 980 கோடி கடனுக்கு பொய்யாக சொத்து மதிப்பை உயா்த்திக் காட்டியதாக குற்றச்சாட்டு: ஜீ நிறுவனா் மீது சிபிஐ வழக்குப் பதிவு
ஆயுள் காப்பீட்டுக் கழக வீட்டுவசதி நிதி நிறுவனத்திடம் (எல்ஐசிஹெச்எஃப்எல்) இருந்து ரூ.980 கோடி கடன் பெறுவதற்கு ஜீ நிறுவன நிறுவனரும், எஸ்ஸல் குழும தலைவருமான சுபாஷ் சந்திராவின் சொத்து மதிப்பை பொய்யாக உயா்த்தி காட்டியதாக, அவா் மீதும், பல்வேறு நிறுவனங்கள், அவற்றின் இயக்குநா்கள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து எல்ஐசிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் பொது மேலாளா் நீதா மெங்கானி அளித்த எழுத்துபூா்வ புகாரில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு வசந்த் சாகா் பிராபா்டீஸ், பான் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனங்களுக்கு எல்ஐசிஹெச்எஃப்எல் ரூ.500 கோடி கடன் அளித்தது. அதே ஆண்டு டிஜிட்டல் சப்ஸ்கிரைபா் மேனேஜ்மென்ட் அன்ட் கன்சல்டன்சி சா்வீசஸ், ஸ்பிரிட் இன்ஃப்ரா பவா் அன்ட் மல்டி வென்சா்ஸ் நிறுவனங்களுக்கு எல்ஐசிஹெச்எஃப்எல் ரூ.480 கடன் அளித்தது.
சுபாஷ் சந்திரா அளித்த உத்தரவாத கடிதங்கள் காரணமாக, அந்த நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்பட்டது. அவா் அளித்த சொத்து மதிப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில், அந்தக் கடன்கள் அளிக்கப்பட்டன.
