பவன் கல்யாண் Vs சந்திரபாபு போட்டி - காரமாக தகிக்கும் ஆந்திர அரசியல்
என்.டி.ஆர் மறைவுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சியின் கட்டுப்பாட்டைத் தன் கையில் கொண்டுவந்த சந்திரபாபுவை, பவன் ஓவர்டேக் செய்வது அவ்வளவு எளிதல்ல.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், அவரது கூட்டணிக் கட்சியான ஜனசேனா தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கும் இடையே உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்தது மோதல். அது இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருப்பதாக ஆந்திர அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
2024 சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் தலைமையில், பவன் கல்யாணின் ஜனசேனாவும் பா.ஜ.க-வும் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. ஆரம்பத்தில் சந்திரபாபுவும் பவனும் இணக்கமாகச் செயல்பட்டனர். ஆனால், சமீபத்திய சில நிகழ்வுகள் இருவருக்குமிடையே உரசல் ஏற்பட்டிருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.





