பூம்புகார் கடலில் 3ம் கட்ட அகழாய்வு துவக்கம்; அமைச்சர் ராஜ்மோகன் கடலில் மூழ்கி ஆய்வை தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் 'பூம்புகாரில்' பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை 2025 மற்றும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு கட்ட அகழ்வாய்வை நடத்தியது.
அதில் கடலில் மூழ்கிய பண்டைய பூம்புகாரின் கட்டிடம் சுற்றுச்சுவர் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகள், பானை ஓடுகள், செங்கல் வானகிரி பகுதியில் கோவில் கண்டறியப்பட்டதுடன், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று மூன்றாம் கட்டமாக பூம்புகார் கடற்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 10 மீட்டர் ஆழத்தில் ஆழ்கடல் பகுதியில் தொல்லியல் துறையினர் அகழ்வாய்வை தொடங்கியுள்ளனர் தொடர்ந்து இந்த ஆய்வு 20 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சார் ஆராய்ச்சி ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறை இணை இயக்குனர் யதீஷ்குமார், இணை இயக்குனர் ஓய்வு சிவானந்தம், தொல்லியல் துறை அலுவலர் வசந்தகுமார் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை ஒரு விசைப்படகு, 2 பைபர் படகுகளில் அதிநவீன டைவிங் உபகரணங்கள், அண்டர் வாட்டர் கேமரா ஆகியவற்றுடன் டைம் போர்ஸ் அமைப்பின் இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதலில் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினர்.




