பூம்புகார் ஆழ்கடலில் தொல்லியல் துறையின் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளின் அடுத்தகட்டத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்துள்ளார்.
மூன்றாம் கட்டமாக, பூம்புகார் கடற்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 10 மீட்டர் ஆழத்தில் ஆழ்கடல் பகுதியில் தொடங்கப்பட்ட ஆய்வு 20 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை அதிகாரிகள்,ஸ்கூபா டைவர்ஸ் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினருடன் விசைப்படகில் கடலில் பயணித்து அங்கிருந்து ஸ்பீட் போட்டை ((speed boat)) ராஜ்மோகன் இயக்கிச் சென்றார்.
அமைச்சர் ராஜ்மோகன், தொல்லியல் துறை இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் ஸ்கூபா டைவிங் இயந்திர உதவியுடன் நீருக்கடியில் மூழ்கி ஆய்வு செய்தனர்.
பின்னர் பேசிய ராஜ்மோகன், அகழாய்வு நிறைவு பெற்ற பிறகு பூம்புகார் உலகத்தில் ஜொலிக்கும் என்று தெரிவித்தார்.
சங்க கால சோழர்களின் புகழ்பெற்ற பண்டைய துறைமுக நகரமான பூம்புகார் என்கிற காவிரிப்பூம்பட்டினம் கடலுக்குள் மூழ்கியதற்கான சான்றுகளையும், தமிழர்களின் பண்டைய கடல்சார் வணிகச் சிறப்புகளையும் மீட்டெடுப்பதே இந்த ஆழ்கடல் அகழாய்வின் முக்கிய நோக்கமாகும்.