தி.மு.க., – திரிணமுல் எம்.பி.,க்கள் மீதான ஊழல் புகார்கள் தள்ளுபடி
புதுடில்லி: தி.மு.க., – எம்.பி., கலாநிதி வீராசாமி, 57, திரிணமுல் காங்., – எம்.பி., அரூப் சக்ரவர்த்தி, 71, ஆகியோருக்கு எதிரான ஊழல் புகார்களை, ஊழல் தடுப்பு அமைப்பான, ‘லோக்பால்’ தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்கத்தின் பாங்குரா தொகுதி எம்.பி.,யான அரூப் சக்ரவர்த்தி, கடந்த மே மாதம், மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த சில நாட்களில், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி, திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த, 20 அதிருப்தி எம்.பி.,க்களில் ஒருவர்.
அரூப் சக்ரவர்த்திக்கு எதிராக, அரசு மீன்பிடி திட்டத்தை முறைகேடாக ஒப்படைத்தது, ‘தாராபூர் ஜில்’ சுற்றுலா பகுதியில், மாதம், 50 லட்சம் ரூபாய் சட்டவிரோத வருவாய் ஈட்டியது, தன் சகோதரர் ஆஷிஷ் சக்ரவர்த்தி மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.
