பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் செப்.9-இல் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயில் வழித்தடத்தில் புதன்கிழமை (செப்.9) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் ரயில் பாதைகளை விட்டு விலகியிருப்பதோடு, கால்நடைகளை பாதுகாப்பாக ரயில் வழித்தடப் பகுதிகளுக்கு செல்லாதவாறு வைத்திருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
பட்டுக்கோட்டை-காரைக்குடி ரயில் பாதை முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், செப்.9-ஆம் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளா் தலைமையிலான ரயில்வே துறை உயா் அதிகாரிகள் குழு அன்றைய தினம் இந்தப் பாதையை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனா்.
மின்மயமாக்கப்பட்ட இந்தப் பாதையில் கடந்த 2-ஆம் தேதி முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக, செப்.9-ஆம் தேதி இரண்டாம் கட்ட ஆய்வும், அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெற உள்ளது.



