Arts, culture, entertainment and media
பட்டுக்கோட்டை -= காரைக்குடி மின்சார ரயில் சோதனை ஓட்டம்
காரைக்குடி, செப். 10- பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு நேற்று 100 கி.மீ. வேகத்தில் மின்சார ரயில் சோதனை
பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு நேற்று 100 கி.மீ. வேகத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
தெற்கு ரயில்வே சார்பில் காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை 80 கி.மீ., தூரத்திற்கு மின் வழிப்பாதை அமைக்கும் பணி நடந்தது. பணி முடிவுற்ற நிலையில் புதிய வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று காலை திருச்சியில் இருந்து தலைமை மின் பொறியாளர் கணேஷ் தலைமையில் மின் இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் காரைக்குடி வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. காலை 9:30 க்கு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ரயில் பட்டுக்கோட்டைக்கு சென்றது. பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 3:30 மணிக்கு மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் காரைக்குடி வந்தடைந்தது.
தெற்கு ரயில்வே தலைமை மின் பொறியாளர் கணேஷ் கூறுகையில்;
காரைக்குடி - பட்டுக்கோட்டை வழித்தடம் மின் வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 100 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. ஆய்வில் மின் வினியோகம், சிக்னல், உயர் அழுத்த கம்பிகளின் இழுவிசை, பாலங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சோதனை ஓட்டம் முடிந்ததை தொடர்ந்து டெமு ரயில் மற்றும் சரக்கு ரயில் இயக்கப்படும். தொடர்ந்து பயணிகள் ரயில் இயக்கப்படும். இதன்மூலம் பயண நேரம் குறையும். மேலும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களை இணைக்கும் வகையில் கூடுதல் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படும். டீசல் பயன்பாடு குறைவதோடு சுற்றுச்சூழல் மாசும் தடுக்கப்படும். தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் 100 சதவீத மின்சார ரயில் போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டுள்ளது.